செனட் கூட்டத்தில் சம்பள பிரச்னையை பேச மறுப்பதா? உறுப்பினர்கள் வெளிநடப்பு
செனட் கூட்டத்தில் சம்பள பிரச்னையை பேச மறுப்பதா? உறுப்பினர்கள் வெளிநடப்பு
UPDATED : ஏப் 03, 2024 12:00 AM
ADDED : ஏப் 03, 2024 09:38 AM

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலை செனட் கூட்டத்தில் பல்கலை அலுவலர்களின் சம்பள பிரச்னையை விரிவாக பேசக் கூடாது என மறுப்பு தெரிவிக்கப்பட்டதை கண்டித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இக்கூட்டம் துணைவேந்தர் குமார் தலைமையில் நடந்தது. பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன், சிண்டிகேட் உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, புஷ்பராஜ், சண்முகவேல், கண்ணன், தர்மராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உறுப்பினர்கள் சந்திரபோஸ், கணேசன், கோபி, பொன்ராம், வேளாங்கண்ணி ஜோசப், பிரபாகரன், சுல்தான் இப்ராஹிம், கிறிஸ்டியானா சிங், வசந்தா உள்ளிட்ட உறுப்பினர்கள் பேசியதாவது:
பிஎச்.டி., ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் புறநிலைத் தேர்வாளர்களுக்கு மதிப்பீட்டு தொகை மூன்று ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதனால் இப்பல்கலை பிஎச்.டி., ஆய்வாளர்களின் ஏராளமான கட்டுரைகள் மதிப்பிடப்படவில்லை. ஆராய்ச்சி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான மதிப்பீட்டு தொகை ரூ.33,96,680 ஒதுக்கப்பட்டு, ரூ.16,57,764 பல்கலைக்கு வரப்பெற்றுள்ளது.
ஆனால் இதுவரை புறநிலை தேர்வாளர்களுக்கு வழங்கப்படவில்லை. இதுபோல் ஆடிட் அப்ஜெக்சன்களை காரணம் காட்டி 60க்கும் மேற்பட்டோருக்கு சம்பள மறுநிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் அவர்களில் 45 பேர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் இடைக்கால தடை பெற்றனர். ஆனாலும் சட்ட ஆலோசனை கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என வாதிட்டனர்.
அப்போது துணைவேந்தர், நீதிமன்றம் உத்தரவின்படி தான் பேசுகிறேன். சம்பள பிரச்னையை மட்டுமே பேசினால் பல்கலை வளர்ச்சிக்கான தீர்மானங்கள் குறித்து பேச முடியாது. அந்த பிரச்னையை பேச வேண்டாம் போய் உட்காருங்கள் என கறாராக பேசினார். அப்போது உறுப்பினர்கள் - துணைவேந்தரிடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின் பொன்ராம் உள்ளிட்டோர், சம்பளம் இல்லை என்பது வாழ்வாதாரப் பிரச்னை. இதை செனட்டில் பேசாமல் எங்கே பேசுவது? என கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
போதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை (கோரம்) இல்லாததால், தொடர்ந்து கூட்டம் நடத்தவும் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அவர்களிடம் பதிவாளர் ராமகிருஷ்ணன், சிண்டிகேட் உறுப்பினர்கள் பேச்சு நடத்தினர். பின் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதன்பின் நடந்த விவாதத்தில், கல்லுாரி மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. மதிப்பூதியம் வழங்கப்படுவதில்லை. புதிய செனட் உறுப்பினர்கள் தேர்தல், செனட்டில் இருந்து சிண்டிகேட் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்த வேண்டும், பிஎச்.டி., ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதில் யு.ஜி.சி., புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர். கேள்விகளுக்கு துணைவேந்தர் குமார், சிண்டிகேட் உறுப்பினர்கள் பதில் அளித்தனர்.