UPDATED : ஆக 02, 2025 12:00 AM
ADDED : ஆக 02, 2025 11:08 AM

துபாய்:
துபாயில் திடீரென சாலையை கடந்து சென்ற மனித வடிவ ரோபோவை கண்டு மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.
மனித உருவ, ரோபோக்கள் உலகஅளவில் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் முன்னேற்றம் கண்டு வருகின்றன.
அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நிறுவனங்கள் இவற்றின் இயக்கம், செயற்கை நுண்ணறிவை புகுத்துதல் மற்றும் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன.
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவன தலைமை செயல் அதிகாரி நாசிஷ் கான், சமீபத்தில் துபாயின் எமிரேட்ஸ் டவர் அருகே காரில் சென்றார்.
அப்போது மனிதர்களை போல் சாலையை கடந்து செல்லும் ரோபோவை பார்த்தார். உடனடியாக அதை வீடியோ எடுத்து, 'எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்' என சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
அந்த வீடியோவில், ரோபோவை ஒருவர் கையடக்க கருவி வாயிலாக இயக்க, அவரின் கட்டளையின்படி ரோபோ இரு கைகளை வீசியபடி சாலையை விறுவிறு என்று கடந்து சென்று எதிர்புற நடை பாதைக்கு சென்று நின்றது, அங்கிருந்து திரும்பி நேராக நடந்து சென்றது பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை பலரும் ஆச்சர்யத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

