தமிழ்நாட்டில் ஹூண்டாய்-ஐஐடிஎம் இணைந்து ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் அமைக்கிறது
தமிழ்நாட்டில் ஹூண்டாய்-ஐஐடிஎம் இணைந்து ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் அமைக்கிறது
UPDATED : ஜூலை 08, 2025 12:00 AM
ADDED : ஜூலை 08, 2025 06:50 PM

சென்னை:
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், சென்னை ஐஐடி, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் ஆகியவை இணைந்து, பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தில் புதுமையைக் கொண்டு வரும் ஹூண்டாய் புத்தாக்க மையத்தின் வடிவமைப்பை வெளியிட்டன.
தமிழ்நாடு அரசின் ஆதரவுடன், இந்த மையம் சென்னை தையூரில் உள்ள சென்னை ஐஐடி டிஸ்கவரி வளாகத்தில் அமைக்கப்படுகிறது. 65,000 சதுர அடியில் பரந்து விரியும் இந்த ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையத்திற்கு, ஹூண்டாய் நிறுவனம் ரூ.100 கோடி நிதி வழங்க உறுதிபூண்டுள்ளது. இதன் மொத்த திட்ட மதிப்பு ரூ.180 கோடி ஆகும்.
இந்த மையம், 2026 ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என திட்டமிடப்பட்டுள்ளது. மேம்பட்ட கணக்கீட்டு ஆய்வுகள், சோதனை ஆய்வகங்கள், எரிபொருள் செல்கள் மற்றும் ஹைட்ரஜன் சேமிப்பு உபகரணங்கள் ஆகியவைகளில் ஆராய்ச்சி நடைபெறும். இது, தொழில்துறைக்கு தேவையான ஹைட்ரஜன் தீர்வுகளை உருவாக்கும் முக்கிய மையமாக அமையும்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு தொழில், முதலீட்டுத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில், பல்வேறு அரசு மற்றும் கல்வித்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சர் ராஜா கூறுகையில், இந்தியாவின் நவீனத்திற்கான திறனையும், தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டையும் இந்த மையம் வெளிப்படுத்துகிறது. தமிழ்நாடு, ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் முன்னிலை வகிக்கிறது. எதிர்கால வளர்ச்சிக்கு இது பலமாக உதவும் என்றார்.
ஹூண்டாய் நிறுவன நிர்வாக இயக்குநர் உன்சூக் கிம், இந்த மையம் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தில் உள்ளூர் கண்டுபிடிப்புகளையும், திறமைகளையும் மேம்படுத்தும். இது, மேக் இன் இந்தியா நோக்கத்தையும் நெடுங்கால சுத்த எரிசக்திக்கான திட்டத்தையும் முன்னெடுக்கும் எனத் தெரிவித்தார்.
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், இந்த ஹைட்ரஜன் மையம் கல்வி, தொழில், அரசு உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் இணைக்கும் முக்கிய தளமாக அமையும். இது, இந்தியாவை ஹைட்ரஜன் துறையில் ஆத்மநிர்பர் பாரத் ஆக மாற்றும். 2070 நிகர பூஜ்ஜிய கார்பன் இலக்கை அடைவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்தும் திறன் கொண்ட மையமாக இது அமையும் எனத் தெரிவித்தார்.
இந்த மையம், 2047 இற்குள் எரிசக்தி சுதந்திரம் மற்றும் 2070 இற்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியீடு என்ற இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வைகளுக்கு உதவும் வகையில் செயல்படும். இதன் மூலம், ஹைட்ரஜன் பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்தியாவை உலக ஹைட்ரஜன் மையமாக மாற்றும் நோக்கத்துக்கு இத்திட்டம் வழிகாட்டும்.