நான் முதல்வன் - உயர்வுக்கு படி முகாமில் மாணவர்கள் பங்கேற்பு
நான் முதல்வன் - உயர்வுக்கு படி முகாமில் மாணவர்கள் பங்கேற்பு
UPDATED : செப் 11, 2024 12:00 AM
ADDED : செப் 11, 2024 08:34 AM
கோவை:
பிளஸ் 2 தேறிய மற்றும் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கான, நான் முதல்வன், உயர்வுக்கு படி முகாமில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
கோவை நவஇந்தியா ஹிந்துஸ்தான் கலை,அறிவியல் கல்லூரியில், இத்திட்டத்தின் கீழ், உயர்வுக்கு படி உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. முகாமில், 2022 - 23 மற்றும் 2023 - 24 ம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
முகாமை கலெக்டர் கிராந்தி குமார் துவக்கி வைத்து பேசுகையில், நல்லவேலை கிடைக்க உயர்கல்வி அவசியம். கோவையில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. அதே சமயம், புதிய தொழில் முனைவோர்களும் உருவாகின்றனர். ஆனால், தகுதியான தொழில்நுட்ப ஊழியர்கள் கிடைப்பதில்லை. கிடைக்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும், என்றார்.
முகாமில், பிளஸ்2 முடித்த மாணவி கற்பகவல்லிக்கு, கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி., தாவரவியல் பாடபிரிவில் சேர்வர்தற்கான உத்தரவை, கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், பங்கேற்ற, 407 மாணவர்களில், 210 மாணவர்கள் அரசு கலை அறிவியல், மற்றும் தனியார் கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில்சேர்க்கப்பட்டனர். மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) ஸ்வேதாசுமன், மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.