எனக்கு கன்னடம் படிக்க தெரியாது! கல்வி துறை அமைச்சர் மது ஒப்புதல்
எனக்கு கன்னடம் படிக்க தெரியாது! கல்வி துறை அமைச்சர் மது ஒப்புதல்
UPDATED : மே 13, 2024 12:00 AM
ADDED : மே 13, 2024 09:10 AM
ஷிவமொகா:
நான் படிப்பில் அவ்வளவு புத்திசாலி அல்ல. எனக்கு கன்னடம் அவ்வளவு நன்றாக படிக்க தெரியாது என பள்ளி கல்வி அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
ஷிவமொகாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், பாகல்கோட் மாவட்டத்தின் மல்லிகேரி முரார்ஜி தேசாய் உறைவிடப்பள்ளி மாணவி அங்கிதா, 625க்கு 625 பெற்று சாதனை படைத்துள்ளார். எங்கள் துறை மாணவிக்கும், அவரது பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். துறையில் பல மாற்றங்கள் செய்துள்ளோம்.
பாடப்புத்தகம் மாற்றம், ஆசிரியர் நியமனம் என, பல மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். கொரோனா காலத்திலும், நடப்பாண்டும் மாணவர்களுக்கு 20 சதவீதம் தகுதி மதிப்பெண் வழங்கி உள்ளோம். நடப்பாண்டு முதல் 'தகுதி மதிப்பெண்' சதவீதம் குறைக்கப்படும்.
தேர்ச்சி பெற்று, அதிக மதிப்பெண் பெறாத மாணவர்கள், மீண்டும் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறலாம். அவர்களுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்த தயாராக உள்ளோம். கடந்தாண்டு 28வது இடத்தில் இருந்த ஷிவமொகா கல்வி மாவட்டம், இம்முறை மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. அரசு பள்ளியில் நல்ல ஆசிரியர்கள் உள்ளனர்.
விரைவில் கர்நாடகாவில் 3,000 கர்நாடகா பப்ளிக் பள்ளிகள் திறக்கப்படும். இதற்காக மாநில கல்வி கொள்கையை அமல்படுத்த தயாராக இருக்கிறோம். லோக்சபா தேர்தலின்போது, எனது படிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் கிண்டல்கள் வலம் வந்தன. நானும் தேர்வில் தோல்வி அடைந்தவன் தான். நான் படிப்பில் அவ்வளவு புத்திசாலி அல்ல. எனக்கு கன்னடம் அவ்வளவு நன்றாக படிக்க தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.