UPDATED : மே 13, 2024 12:00 AM
ADDED : மே 13, 2024 09:10 AM
பாட்னா:
பீஹாரில் நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக இதுவரை நான்கு தேர்வர்கள் உட்பட அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 13 பேரை அம்மாநில போலீசார் கைது செய்து உள்ளனர்.
இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 5ம் தேதி நாடு முழுதும் நடந்தது. பீஹாரில் இத்தேர்வு நடைபெறும் முன் வினாத்தாள் கசிந்ததாகவும், இதன் காரணமாக 30க்கும் மேற்பட்ட தேர்வர்கள் கேள்விக்கான விடைகளை பெற்றதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்தினர். இதில், நான்கு தேர்வர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 13 பேரை பீஹார் போலீசார் கைது செய்தனர். கைதான நபர்களில் ஒருவர், ஆசிரியர் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே, கைதான நபர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துஉள்ளனர்.