உருவ கேலிக்கு அஞ்ச மாட்டேன்: முதலிடம் பிடித்த மாணவி உறுதி
உருவ கேலிக்கு அஞ்ச மாட்டேன்: முதலிடம் பிடித்த மாணவி உறுதி
UPDATED : ஏப் 29, 2024 12:00 AM
ADDED : ஏப் 29, 2024 11:59 AM
புதுடில்லி:
உத்தர பிரதேசத்தில், 10வது பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றம் குறித்து சமூக வலைதளத்தில் கிண்டல் செய்யப்பட்டதற்கு, மாணவி துணிச்சலாக பதில் அளித்துள்ளார்.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் 10வது பொது தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. பிராச்சி நிகாம் என்ற மாணவி, 98.50 சதவீதம் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். அவரது புகைப்படம் ஊடகங்களில் வெளியானது.
மாணவி பிராச்சிக்கு முகத்தில் ரோமங்கள் அதிகம் இருப்பதால், ஆண்களை போல அவருக்கு லேசான மீசை வளர்ந்துள்ளது. பிராச்சியின் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் பலர் கிண்டல் செய்ய துவங்கினர்.
இது குறித்து மாணவி பிராச்சி நிகாம் கூறியதாவது:
என் புகைப்படத்தை பார்த்து சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் செய்தாலும், என்னை வாழ்த்திய பலருக்கு நன்றி. அந்த கிண்டல்கள் என்னை பெரிதாக பாதிக்கவில்லை. மதிப்பெண்கள் தான் முக்கியமே தவிர, என் தோற்றம் அல்ல.
கிண்டல் செய்பவர்கள் அதை தொடரலாம். அதற்காக நான் கவலைப்பட மாட்டேன். தோற்றத்திற்காக சாணக்கியரே கிண்டல் செய்யப்பட்டுள்ளார். அதெல்லாம் அவரை பாதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
காங்., பொதுச்செயலர் பிரியங்கா, மாணவி பிராச்சியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். அப்போது, இந்த கிண்டல்களை புறந்தள்ளும்படி அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.