விடைத்தாளில் சினிமா பாடல் மாணவர்களுக்கு பாஸ் மார்க்
விடைத்தாளில் சினிமா பாடல் மாணவர்களுக்கு பாஸ் மார்க்
UPDATED : ஏப் 29, 2024 12:00 AM
ADDED : ஏப் 29, 2024 12:01 PM

லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியில் வீர் பகதுார் சிங் பூர்வாஞ்சல் பல்கலை உள்ளது.
இந்த பல்கலையின் மாணவர் அமைப்பின் தலைவர் திவ்யான்சு சிங் என்பவர், முதல்வர், பல்கலை வேந்தரான கவர்னர் மற்றும் துணை வேந்தருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், பல்கலை பேராசிரியர்கள் சிலர் மாணவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, சம்பந்தம் இல்லாத விடை எழுதி வைத்திருந்தாலும் தேர்ச்சி மதிப்பெண் அளித்துஉள்ளனர்.
மதிப்பெண் பெறவே தகுதியில்லாத விடைத்தாளுக்கு கூட, 60 சதவீத மதிப்பெண் வழங்கி உள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது' என கூறியிருந்தார்.
தற்பொது அந்த விடைத்தாள்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் சில கேள்விகளுக்கு, சற்றும் தொடர்பு இல்லாமல், கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுஉள்ளன.
மற்ற சில விடைத்தாள்களில் சினிமா பாடல்களையும், ஜெய் ஸ்ரீராம் என்ற வாசகத்தையும் எழுதி வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கவர்னர் மாளிகை, பல்கலை துணை வேந்தருக்கு கடிதம் எழுதியது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
அதில், விடைத்தாள்களை திருத்திய பேராசிரியர்களான டாக்டர் வினய் வர்மா மற்றும் மணீஷ் குப்தா ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.