எனது காரில் அழைத்து செல்வேன்: மாணவர்களுக்கு டி.ஆர்.ஓ., ஊக்கம்
எனது காரில் அழைத்து செல்வேன்: மாணவர்களுக்கு டி.ஆர்.ஓ., ஊக்கம்
UPDATED : ஜன 04, 2025 12:00 AM
ADDED : ஜன 04, 2025 10:26 AM
விருத்தாசலம்:
விருத்தாசலம் அரசு பள்ளியில், மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் வருகை புரிந்தால் எனது காரில் செல்லலாம் என டி.ஆர்.ஓ., ஊக்கமளித்தார்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் தடைகளை தாண்டி தேர்ச்சி திட்டத்தின் கீழ் அரசு பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் அனைவரும் இடைநிற்காமல் தேர்வு எழுதவும், 100 சதவீத தேர்ச்சி பெறவும் முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதன்படி, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது, ஆசிரியர்களிடம் கற்பித்தல் முறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், டி.இ.ஓ., துரைபாண்டியன், தாசில்தார் உதயகுமார் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வினோத்குமார் வரவேற்றார். அதில், குறைந்த மதிப்பெண் பெறும் மற்றும் சரிவர பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை தனித்தனியே அழைத்து டி.ஆர்.ஓ., ராஜசேகரன் கவுன்சிலிங் வழங்கினார்.
அப்போது, அடுத்த முறை பள்ளிக்கு வரும்போது, 100 சதவீதம் வருகை புரியும் மாணவர்கள் எனது சைரன் காரில், எனது இருக்கையில் அமரச் செய்து அழைத்துச் செல்வேன் என டி.ஆர்.ஓ., ஊக்கமளித்தார். பின்னர், ஆசிரியர்களிடம் கற்பித்தல் திறன் மற்றும் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பது குறத்து ஆலோசனை வழங்கினார்.
பள்ளிக்கு காலையில் வந்து வகுப்புகளை புறக்கணித்து வெளியே செல்லும் மாணவர்களை போலீசார் மூலம் கண்காணிக்குமாறு ஆர்.டி.ஓ.,வுக்கு அறிவுத்தினார். பள்ளி செல்லா குழந்தைகளுக்கான வட்டார ஒருங்கிணைப்பாளர் வரதராஜபெருமாள் நன்றி கூறினார்.