உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை கண்டறிந்து ஆலோசனை!
உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை கண்டறிந்து ஆலோசனை!
UPDATED : ஜூன் 17, 2025 12:00 AM
ADDED : ஜூன் 17, 2025 09:05 AM

 ராமநாதபுரம்: 
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்து இதுவரை உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை கண்டறிந்து பள்ளிக் கல்வித்துறையால் வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களை அவர்களது வீடுகளில் சந்தித்து ஆலோசனை வழங்குகின்றனர்.
நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் 100 சதவீதம் உயர்கல்வியில் சேர்வதற்காக விண்ணப்பிக்க செய்யும் பணி அவர்கள் பயின்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து இப்பணி தினமும் ஆய்வு செய்யப்படுகிறது.
இதுவரை உயர்கல்விக்கு சில காரணங்களால் விண்ணப்பிக்காத மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கி உயர்கல்விக்கு விண்ணப்பிக்கச் செய்யும் பணியை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையால் வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களை அவர்களது வீடுகளில் சந்தித்து வருகின்றனர்.
இதன்படி நயினார்கோவில் ஒன்றியத்தில் முதன்மைக்கல்வி அலுவலர்(பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமையிலான குழு உயர்கல்விக்கு விண்ணப்பிக்காதோரைச் சந்தித்து உயர்கல்வியில் சேர வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தனர்.
வரும் வாரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற உள்ள மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ள அறிவுறுத்தினர். உடன் நயினார்கோவில் வட்டாரக்கல்வி அலுவலர் உஷாராணி, ஆசிரியப் பயிற்றுநர் புஷ்பலதா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.
இந்த நடவடிக்கையால் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி படிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.                

