ரூ.300 கோடி ஒதுக்கினால் 13 ஆண்டு ஏக்கம் தீரும் பகுதி நேர ஆசிரியர்களின் கணக்கு
ரூ.300 கோடி ஒதுக்கினால் 13 ஆண்டு ஏக்கம் தீரும் பகுதி நேர ஆசிரியர்களின் கணக்கு
UPDATED : ஏப் 15, 2025 12:00 AM
ADDED : ஏப் 15, 2025 11:34 AM

கடந்த, 2011, ஆக., 26ல், தமிழக அரசு, 12 ஆயிரத்து 500 பகுதி நேர ஆசிரியர்களை நியமித்தது; இதற்கென, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
கடந்த, 13 ஆண்டுகளில் மரணம், ஓய்வு உள்ளிட்ட காரணங்களால், 5,000 பகுதி நேர ஆசிரியர் பணியிடம் காலியாகிவிட்டது.தற்போது, உடற்கல்வி மற்றும் ஓவியப்பாடத் துக்கு, தலா, 3,700 பேர்; கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்துக்கு, 2,000; தையல் பாடத்துக்கு, 1,700; இசை பாடத்துக்கு, 300; வாழ்க்கை கல்வி பாடத்துக்கு, 200; கட்டட கலை பாடத்திற்கு, 60, தோட்டக்கலை பாடத்திற்கு, 20 பேர் பணிபுரிகின்றனர்.
தற்போதைய சூழலில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மாதம், 12, 500 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங் கப்படுகிறது. தற்போதைய விலைவாசியில் இந்த சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்த முடியுமா? என கேள்வி எழுப்புகிறார் பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்.
அவர் கூறியதாவது:
பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் தவிர, வேறெந்த பண பலனும் கிடையாது. அகவிலைப்படி உள்ளிட்ட அரசு சலுகைகள் கிடைக்க காலமுறை சம்பளத்தில் பணியமர்த்த வேண்டும்.
காலமுறை சம்பளம் வழங்க, ஆண்டுக்கு, 450 கோடி ரூபாய் செலவாகும். தற்போது, 12, 500 ரூபாய் தொகுப்பூதியம் வழங்க செலவிடப்படும் தொகை, 160 கோடி ரூபாய்.
கூடுதலாக, 300 கோடி ரூபாயை ஒதுக்கினால், காலமுறை சம்பளம், பணி நிரந்தரம் செய்ய போதுமானதாக இருக்கும். இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு, 46, 767 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இதில் இருந்து, 300 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும்.
பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்ற தி.மு.க.,வின், 181வது தேர்தல் வாக்குறுதியை, வரும், 24ம் தேதி பள்ளிக்கல்வி துறை மீதான மானிய கோரிக்கையின் போது, 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பார் என, எதிர்பார்க்கிறோம். இந்த பட்ஜெட்டை தவறவிட்டால், வேறு வாய்ப்பே இல்லை.