கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்
UPDATED : மார் 10, 2025 12:00 AM
ADDED : மார் 10, 2025 01:55 PM
மதுரை:
நாங்கள் போராடி பெற்ற உரிமைகளை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதாக அறிவிக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்தது. இன்று, மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அலுவலர் குழு அமைத்துள்ளது. அக்குழுவை உடனே திரும்ப பெற வேண்டும்.
இந்த ஆட்சியாளர்கள் தாக்கல் செய்யும் முழுமையான கடைசி பட்ஜெட் இது தான். இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். நாங்கள் பெறும் உரிமைகளும், சலுகைகளும் போராடி பெற்றவை. எங்கள் உணர்வை புரிந்து, தமிழக அரசு இந்த பட்ஜெட் கூட்ட தொடரிலேயே கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். ஏமாற்ற நினைத்தால், 2026 சட்டசபை தேர்தலில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
எங்கள் கோரிக்கைகளுக்காக, வரும், 12ல் புதிய காப்பீடு திட்டத்தை புதுப்பிக்கையில் ஊழியர்களின் விருப்பத்தை கேட்க வேண்டும் என, மாவட்ட கருவூலகங்களில் ஆர்ப்பாட்டம், வரும், 13ல் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் மாவட்ட தலைநகரில் மறியல், வரும், 19ல் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்களுக்கு வாழ்வூதியம் கோரி, கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்., 17ல் வாழ்வூதியம் கோரி மாவட்ட தலைநகரில் பேரணி நடத்துவது, ஏப்., 24ல் காப்பீடு திட்டத்தை புதுப்பிக்கும் போது ஊழியர்களின் விருப்புரிமை கேட்க சென்னை கருவூல கணக்குத்துறை ஆணையர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என, ஈரோட்டில் நடந்த மாநில செயற்குழுவில் முடிவெடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.