அரசு உதவினால் வாழ்க்கை மேம்படும்! மாற்றுத்திறனாளியின் தாய் வேண்டுகோள்
அரசு உதவினால் வாழ்க்கை மேம்படும்! மாற்றுத்திறனாளியின் தாய் வேண்டுகோள்
UPDATED : ஜூலை 25, 2024 12:00 AM
ADDED : ஜூலை 25, 2024 09:51 AM
பல்லடம்:
மாற்றுத்திறனாளியான தனது மகனுக்கு அரசு உதவினால், எங்களது வாழ்க்கை மேம்படும் என, பல்லடம் அருகே, மாற்றுத்திறனாளியின் தாய் ஒருவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பல்லடம் அடுத்த, காரணம்பேட்டையை சேர்ந்தவர் ஈஸ்வரன் 57; கூலி தொழிலாளி. மனைவி வேணி,52, மகன் லோகேஷ், 20; மகள் ரீனா,. 16. கூலி வேலைக்குச் சென்று வந்த ஈஸ்வரன், கடந்த சில ஆண்டுக்கு முன் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி கால் முறிந்தது.
இதனால், மாற்றுத்திறனாளியான இவரால், வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. மகன் லோகேஷ், பத்தாம் வகுப்பு வரை முடித்துள்ளார். மாற்றுத்திறனாளியான இவருக்கு காது கேட்காது; சரிவர பேசவும் முடியாது. கணவரும், மகனும் மாற்றுத்திறனாளியாக இருக்க குடும்பத்தின் மொத்த சுமையும் வேணி மீது விழுந்தது.
தனது தாயுடன் அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று வரும் லோகேஷ், கிடைக்கும் நேரத்தில் தனது திறமையை பயன்படுத்தி ஓவியம் வரைகிறார். சிறு வயது முதல் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட இவர், படங்கள் மட்டுமன்றி, தன்முன் இருப்பவர்களை அப்படியே தத்ரூபமாக வரையக்கூடிய திறமையும் பெற்றுள்ளார்.
பாரதியார், காந்தி, நேதாஜி உள்ளிட்ட பல்வேறு ஓவியங்களையும் வீட்டில் வரைந்து வைத்துள்ளார். மாற்றுத்திறனாளி என்பதுடன், குடும்பத்தின் ஏழ்மை காரணமாக தொடர்ந்து படிக்க முடியவில்லை என்கிறார் லோகேஷ்.
இது குறித்து வேணி கூறுகையில், நான் கூலி வேலைக்குச் சென்று வருவதில் கிடைக்கும் வருமானத்தாலும், மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகையை பயன்படுத்தியும் குடும்பம் நடத்தி வருகின்றோம்.
ஓவியம் வரையும் எனது மகனின் திறமையை அடிப்படையாகக் கொண்டு, அரசு ஏதேனும் உதவினால், அதன் மூலம் அவர் தனது திறமையை வளர்த்துக் கொண்டு, பெற்றோரை பாதுகாப்பதுடன், மகள் உயர்கல்வி கற்கவும் பேருதவியாக இருக்கும். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி கோரிக்கையை ஏற்க வேண்டும், என்றார்.

