கொட்டிக்கிடக்கும் படிப்புகள் அறிந்தால் இல்லை குழப்பங்கள்
கொட்டிக்கிடக்கும் படிப்புகள் அறிந்தால் இல்லை குழப்பங்கள்
UPDATED : ஜூன் 30, 2025 12:00 AM
ADDED : ஜூன் 30, 2025 08:38 AM

திருப்பூர்:
வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள் என்ற தலைப்பில், கல்வி ஆலோசகர் ரமேஷ்பிரபா பேசினார்.
அவர் பேசியதாவது:
யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது; கவுன்சிலிங்கில் கல்லுாரி தேர்வு மிக முக்கியம். அனைவரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மட்டுமே தேடுகிறீர்கள். இதில் மட்டும், 16 உட்பிரிவுகள் உள்ளன.
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் இவை மூன்றும் தான் இன்ஜினியரிங் படிப்புக்கு அடிப்படை. இவற்றில் இருந்து தான் பிற படிப்புகள் முளைக்கின்றன.கவுன்சிலிங் நடைமுறையின் போது வழங்கப்படும் இன்பர்மேஷன் (தகவல்) பகுதியை பலரும் முழுமையாக படிப்பதில்லை.
பல தரப்பட்ட படிப்பு, உட்பிரிவுகள் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது.அது சார்ந்த இன்ஜினியரிங் படிப்புகள் வேலைவாய்ப்பு வரும் காலத்தில் அதிகமாகும். சிவில் படிப்புக்கு மீண்டும் மவுசு கூடும். அனைவருமே கம்ப்யூட்டர் சார்ந்த படிப்பு தான் வேண்டும் என தேர்வு செய்தால், பல்கலையில் உள்ள, 300க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் படிப்புகள் என்னாவது? அவற்றுக்கு வேலை கிடைத்துக் கொண்டே தான் இருக்கிறது.
மாணவருக்கான இன்ஜி., படிப்பு; மாணவிகளுக்கான இன்ஜி., படிப்பு என்ற காலம் எல்லாம் மலையேறி விட்டது; அனைத்து இன்ஜி., படிப்புகளையும், ஆண்களுக்கு இணையாக பெண்களும் தேர்வு செய்கின்றனர்; படிக்கின்றனர். கோர்ஸ் விபரங்களை முழுமையாக அறிந்து யாரும் தேர்வு செய்யாத அரிய படிப்புகளை தேர்வு செய்யுங்கள்.
இவ்வாறு, ரமேஷ்பிரபா பேசினார்.
இனி, படிக்கப்போவது பிளஸ் 3
இதுவரை படித்தது பிளஸ் 2 என்றால், இனி நீங்கள் படிக்க போவது பிளஸ் 3. கல்லுாரிக்குள் நுழையும் முன்பே, அரியர் கூடாது என்பதை மனதில் நினையுங்கள். பெற்றோர் ஒப்புதலுடன் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் பலர், மனதை ஒருநிலைப்படுத்தி படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். மூன்று தெரு தாண்டி போக மாட்டேன்; முப்பது - அறுபது கி.மீ.,க்குள் படிக்க வேண்டும் என்பதெல்லாம் எடுபடாது.
பள்ளி படிப்பு முடித்து உயர்கல்விக்கு போக போகிறீர்கள்; சில நாட்களில் சொந்த காலில் நிற்கப் போகிறீர்கள். பெற்றோரே... உங்களுக்கு அன்பான வேண்டுகோள்... பொத்தி வளர்த்தது போதும்; இனி, பொறுப்பை அவர்களுக்கு சொல்லி கொடுங்கள் என்றார், கல்வி ஆலோசகர் ரமேஷ்பிரபா.