தன்னம்பிக்கையோடு விடா முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் நீட் சாதனை மாணவர்களின் பேட்டி
தன்னம்பிக்கையோடு விடா முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் நீட் சாதனை மாணவர்களின் பேட்டி
UPDATED : ஜூன் 08, 2024 12:00 AM
ADDED : ஜூன் 08, 2024 10:59 AM
விருதுநகர்:
இந்தியாவின் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வாக நீட் உள்ளது. இந்த தேர்வால் தரமான மருத்துவ மாணவர்கள் பலர் உருவாகி வருகின்றனர்.
இத்தகைய முக்கியம் வாய்ந்த தேர்வை ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் சேர்ந்து சேவை செய்வதை இலக்காக கொண்ட மாணவர்கள் தன்னம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன் படித்து வெற்றி பெறுகின்றனர்.
இவ்வாறு படித்து விருதுநகர் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற சாதனை மாணவர்களின் நீட் பயிற்சிக்கு தயாரான தங்களின் பயணம் குறித்தும், அவர்கள் பிற மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையிலும் கூறும் கருத்துக்கள் இதோ...
நீட் தேர்வில் 655 மதிப்பெண்கள் எடுத்த பாபு ரங்கன், விருதுநகர்: மருத்துவராக வேண்டுமென முடிவு செய்து 10ம் வகுப்பு முடிந்ததும் கால அட்டவணை போட்டு ஒவ்வொரு பாட வாரியாக புரிந்து படிக்க துவங்கினேன். பள்ளி படிப்போடு, நீட் பயிற்சியும் பெற்றேன்.
2 ஆண்டுகள் முழுவதுமாக இவ்வாறு படித்தேன். பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் நீட் கோச்சிங் சென்டரில் சேர்ந்து தினமும் எழுதிய தேர்வில் பிழைகளை கண்டறிந்து அவற்றை எவ்வாறு சரி செய்வது என தொடர்ந்து பயிற்சி எடுத்தேன். நீட் தேர்வில் வெற்றி பெற விரும்புவோர் கால அட்டவணை அமைத்து, திட்டமிட்டதை முழுதாக படிக்க வேண்டும்.
இலக்கை அடையும் வரை தொடர்ந்து முயற்சி செய்து அதை சிறிது சிறிதாக வெற்றி காண வேண்டும். தொடர்ந்து மாதிரி தேர்வுகள் எழுதினாலே பயம் போய் நிச்சயம் நீட் தேர்வில் வெற்றி கண்டு விடலாம். தன்னம்பிக்கையோடு படித்தாலே வெற்றி நிச்சயம், என்றார்.
629 மதிப்பெண்கள் எடுத்த சஞ்சய் ராஜ், ராஜபாளையம்: சிறுவயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது. பெற்றோர் சிங்கராஜ் -ரேகா இருவரும் மில் தொழிலாளிகள். எனது விருப்பத்தை உணர்ந்து பிளஸ் 1 முடியும் போது தாய் மாமா உதவியுடன் ஆன்லைன் கோச்சிங் சென்டரில் சேர்த்தனர். வாரத்தில் 2 நாள் பள்ளி பாடத்தையும் நீட் பயிற்சி பாடத்தை 4 நாள் என பிரித்து இலக்கு வைத்து படித்ததால் முதல் முயற்சியில் 629 மதிப்பெண் எடுத்துள்ளேன்.
பயிற்சி வகுப்பில் பல்வேறு மாதிரி தேர்வுகளை எழுதி ஒவ்வொரு கட்டமாக அடுத்த நிலைக்கு சென்றதன் மூலம் தேர்வை சுலபமாக எதிர்கொண்டேன். சாதிக்க வேண்டும் என்ற முயற்சியுடன் படித்தால் நீட் தேர்வு வெற்றி அனைவருக்கும் சாத்தியமே.