UPDATED : ஆக 29, 2024 12:00 AM
ADDED : ஆக 29, 2024 05:11 PM

சென்னை:
சென்னை ஐஐடி, ஐஐடி ரோபருடன் எம்.எஸ் படிப்பிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சென்னை ஐஐடியில் எம்.பி.எஸ் படிக்கும் மாணவர்கள் ஐஐடி ரோபரில் எம்.எஸ் படிப்பில் நேரடியாக சேரலாம். இதற்கு கேட் உள்ளிட்ட எந்த நுழைவுத் தேர்வும் தேவையில்லை. சென்னை ஐஐடியில் எம்பிஎஸ் பட்டம் படிக்கும் மாணவர்கள் கோடைக் காலத்தில் ஐஐடி ரோபர் வழங்கும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்கள் ஐஐடி ரோபர் ஆசிரியர்களிடம் புராஜக்டுகள், இன்டர்ஷிப் பயிற்சிகளை இதன்மூலம் தொடரமுடியும்.
இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், சென்னை ஐஐடியில் பி.எஸ் பட்டப்படிப்புப் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய முதுகலைப் படிப்பை ஐஐடி ரோபரிலும் தொடரலாம், என்றார்.
ஐஐடி ரோபரின் இயக்குநர் ராஜீவ் அஹுஜா கூறுகையில், சென்னை ஐஐடி உடனான இந்த ஒப்பந்தத்தின் மூலம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் புதிய பாதைகளை உருவாக்கும், என்றார்.
இந்த ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி, ஐஐடி ரோபர் இயக்குநர் பேராசிரியர் ராஜீவ் அஹுஜா ஆகியோர் நேற்று (ஆக.,28) கையெழுத்திட்டனர். ஐஐடி ரோபர் டீன் (ஆர்&டி) பேராசிரியர் புஷ்பேந்திர பி.சிங், கணினி அறிவியல்- பொறியியல் துறைத்தலைவர் பேராசிரியர் சுதர்சன் ஐயங்கார், சென்னை ஐஐடி டீன் (கல்விப் பாடத்திட்டங்கள்) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ், பிஎஸ் பட்டப்படிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ், பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.