தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துங்க..: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துங்க..: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்
UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 03:24 PM

புதுடில்லி:
தேசிய கல்விக் கொள்கை பற்றி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், அரசியல் ஆதாயத்தை தவிர்த்துவிட்டு மாணவர்களின் நலனை முன்னிறுத்தி புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இன்னும் இணையவில்லை. இதனால் பி.எம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு கல்வி உட்கட்டமைப்புகளுக்காக வழங்கப்படும் நிதி இன்னும் மத்திய அரசால் வழங்கப்படவில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், பிஎம் ஸ்ரீ திட்டமானது மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையையை போன்றுள்ளது. மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்த கோருகிறது என்றும், அதனால் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணையவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மாநில கல்வித்துறைக்கு மத்திய அரசு, உரிய நிதி வழங்காதது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வளைதள பக்கத்தில் கண்டன பதிவை குறிப்பிட்டுள்ளார். அதில், தேசிய கல்விக் கொள்கைக்கு தலைவணங்க மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை பா.ஜ., மறுக்கிறது.
அதே நேரத்தில் கல்வியில் குறிப்பிட்ட இலக்கை அடையாதவர்களுக்கு தாராளமாக நிதியை அளிக்கிறது. தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்த மத்திய பா.ஜ., அரசின் திட்டம் இதுதானா? இதுபற்றி நம் தேச மக்களே முடிவெடுக்க வேண்டும் என விட்டுவிடுகிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் பதில்
இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவிட்டதாவது:
ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி எப்போதும் வரவேற்கத்தக்கது. தேசிய கல்விக்கொள்கைக்கு உங்கள் கொள்கை ரீதியான எதிர்ப்பில் நான் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன்:
* தமிழ் உள்ளிட்ட தாய்மொழியில் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்களா?
* தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வு நடத்துவதை எதிர்க்கிறீர்களா?
* தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் மற்றும் உள்ளடக்கம் உருவாக்கப்படுவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
* தேசிய கல்விக் கொள்கையின் முழுமையான, சமமான மற்றும் உள்ளடக்கிய கட்டமைப்பை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
அப்படி இல்லாவிட்டால், அரசியல் ஆதாயத்தை தவிர்த்துவிட்டு மாணவர்களின் நலனை முன்னிறுத்தி புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.