UPDATED : செப் 29, 2025 08:25 AM
ADDED : செப் 29, 2025 08:25 AM

அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் 5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் சேரும் குழந்தையின் தாய்மொழி வழியாகவே 2-ம் வகுப்பு வரை கல்வி புகட்ட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றால் அந்த மாநில மொழி பயிற்று மொழியாக இருக்கலாம் என்றும், 2 முதல் 5-ம் வகுப்பு வரை அதே பயிற்று மொழியை விரும்பினால் தொடரலாம் அல்லது வேறு மொழியை தேர்ந்தெடுக்கலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., கல்வி வாரியத்தின்கீழ் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்குகின்றன. இத்தகைய புரட்சிகரமான முடிவை மத்திய கல்விவாரியம் எடுத்து அமல்படுத்துவதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்-ளது. தாய்மொழி கல்விக்கு தேவையான 2-ம் வகுப்பு வரையிலான என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள் தயார் நிலை-யில் இருப்பதாகவும், 5-ம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருப்-பதும் கல்வியாளர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
பல்வேறு தாய்மொழியைக் கொண்டமாணவர்களுக்கு வகுப்புகளை ஒதுக்குவதும், ஆசிரியர்களை நியமிப்பதும் நடைமுறையில் சிரமமான காரியம் என்று ஆசிரியர்கள் தரப்பில் கருத்து தெரிவித்தாலும், இதுபோன்ற சிக்-கல்கள் எதிர்காலத்தில் தீர்க்கப்பட வாய்ப்புள்ளது.
வரவேற்புக்குரியது
துவக்கக்கல்வி, தாய்மொழி வாயிலாக கற்பிக்கப்பட வேண்டும் என்பது வரவேற்கப்பட வேண்டியது. அந்த பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் சமீபத்தில் உத்தரவிட்டதும் பாராட்டுதலுக்கு உரியது.
தாய்மொழியைத் தவிர வேறு எந்த மொழியையும், எந்த வயதிலும் நாம் கற்றுக் கொள்ள முடியும். மொழி என்பது தொடர்பு நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நமக்கு தெரிந்த மொழியில் கற்றல் இருந்தால் மட்டுமே அது முழுமை பெறுகிறது.
வீட்டில் தாயின் அரவணைப்பில் வளரும் குழந்தைகள், அவர் சொல்லித் தரும் பிறமொழி பக்திப் பாடல்களை புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், எளிதில் அதை கற்றுக்கொள்கின்றனர். அதுபோலத்தான், ஆங்கில மொழி புரியாவிட்டாலும், ஆசிரியர்கள் சொல்வதை வைத்து, மனதில் ஏற்றிக்கொண்டு இறுதித்தேர்வை மாணவர்கள் எழுதுகின்றனர்.
புரிதல் எளிதாகும்
தாய்மொழி தவிர பிற பாடங்களான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்றவற்றை புரியாமல் மனப்பாடம் செய்யும் நிலைதான் துவக்கக்கல்வியில் நீடிக்கிறது. தாய்மொழியில் இல்லாததால், அந்த பாடங்களை புரிந்துகொள்ள முடியாமல் அவதிப்படுவதுடன், கற்றல் குறைபாடும் மாணவர்களுக்கு ஏற்படுகிறது.
கற்றலில் மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. பயிற்றுவிக்கப்படும் மொழியை புரிந்துகொள்ளாமல் கற்றல் சாத்தியமில்லை. ஒரு தனிமனிதனின் கற்றல் என்பது அறிவை சார்ந்தே உள்ளது.
தான் கற்கும் கல்வியை புரிந்துகொண்டு, தன் ஆற்றல் அறிவை அவன் வளர்த்துக் கொள்கிறான். அதேசமயம், தான் கற்று தேர்ந்ததை பிறருக்கு சொல்லித் தருகிறான்.
இவை அனைத்திற்கும் அடிப்படையாக தாய்மொழி இருக்கிறது. ஒரு மனிதனின் அறிவு பெருக்கம் என்பது அவனுடைய 6 முதல் 10 வயது வரை நிகழ்கிறது. முதன்மை ஆண்டுகள் என குறிப்பிடப்படும் இந்த வயதிற்கான காலம் துவக்கக் கல்வியை ஒட்டியுள்ளது.
ஒரு நபர், துவக்கக்கல்வியில் அதிகபட்சமாக பயனடைய, வகுப்பறையில் பயன்படுத்தப்படும் மொழி மிகவும் அவசியமானது என்பதைப் புரிந்துகொண்டால், தாய்மொழியின் முக்கியத்துவத்தை அனைவராலும் புரிவது எளிதாகும்.
ஏன் சிறந்தது?
துவக்கக்கல்வியில் பெற்ற கற்றல் திறனை மேலும் விரிவுபடுத்த நடுநிலைப்பள்ளி கல்வி உதவுகிறது. இந்த திறன்களில் தேர்ச்சி பெற்ற ஒருவர், அதை உயர்நிலைப்பள்ளிகளில் பயன்படுத்துகிறார். துவக்கம், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கற்ற அனுபவத்தை வைத்து, தன் செயல்திறனை வளர்த்துக் கொள்கிறார்.
இவை அனைத்திற்கும் அடிப்படையாக அமைவது கற்றல் மொழி. துவக்கப்பள்ளியில் தேர்ந்தெடுக்கும் கற்றல் மொழியே, அடுத்தடுத்த காலகட்டங்களில் பாடங்களை புரிந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் உதவுகிறது.
அவ்வாறு, உரிய கற்றல் மொழித்திறன் இல்லாதபோது, உயர்நிலைக் கல்வி வரை ஒரு மாணவர் கற்ற கல்வி ஒருபோதும் பயன் தராது. அதன் வாயிலாக, திரட்டப்பட்ட கல்வி அறிவும் முழுமை பெறாது. தாய்மொழி கல்வி தரும் நன்மை குறித்த அடிப்படை புரிதல்கூட பெற்றோர்களிடமும் அவசியம் தேவை.