UPDATED : ஏப் 23, 2024 12:00 AM
ADDED : ஏப் 23, 2024 05:32 PM

ஐக்கிய நாடுகள்:
இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் பிறப்பித்து உள்ளார்.
இந்த பொறுப்பை நேற்று( ஏப்.,22) அவர் ஏற்றுக் கொண்டார். ஐ.நா.,வில் பருவநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி, நிர்வாகம் மற்றும் சமூக கொள்கை ஆகிய துறைகளில் 30 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார்.
இந்தோனேஷியாவில் ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக கீதா சபர்வால் நியமிக்கப்படுவதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இதற்கு முன்னர், கீதா சபர்வால் தாய்லாந்தில் ஐ.நா., ஒருங்கிணைப்பாளர் ஆகவும், இலங்கையில் அமைதி ஏற்படுத்துதல் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா.,வின் ஆலோசகர் ஆகவும் பணியாற்றி உள்ளார். பிரிட்டனின் வேல்ஸ் பல்கலையில் வளர்ச்சி மேலாண்மை பாடத்தில் பட்ட மேற்படிப்பு முடித்து உள்ளார்.