UPDATED : ஏப் 23, 2024 12:00 AM
ADDED : ஏப் 23, 2024 10:49 AM

கோவை:
கோவை மாவட்டத்தில் உள்ள, 328 தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., மற்றும் 1ம் வகுப்பில் இலவச கல்வி பெற, மே 20 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
குழந்தைகளுக்கான இல வச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 2024--25ம் கல்வி ஆண்டுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி., 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில், 328 தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கைக்கு 15 ஆயிரத்து 619 இடங்கள் உள்ளன.
இதில், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் கல்வி பயில, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்.கே.ஜி. வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள், 01.08.2020 முதல் 31.07.2021 க்குள் பிறந்திருக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள், 01.08.2018 முதல் 31.07.2019 க்குள் பிறந்திருக்க வேண்டும்.
பிறப்புச் சான்று, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வங்கி பாஸ் புத்தகம், தொலைபேசி கட்டண ரசீது, பான் கார்டு, கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்ட வசிப்பிடச் சான்றிதழ், மாநில, மத்திய, அரசு, பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்படும் அடையாள அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், rte.tnschools.gov.in என்ற இணைய வழியாகவோ, முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், ஒருங்கிணைந்த வட்டார வளமைய அலுவலகங்கள் வாயிலாகவோ, கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.