கல்வியில் தங்கள் கொள்கைகளை திணிப்பதா?: மத்திய அரசுக்கு இ.பி.எஸ்., கேள்வி
கல்வியில் தங்கள் கொள்கைகளை திணிப்பதா?: மத்திய அரசுக்கு இ.பி.எஸ்., கேள்வி
UPDATED : ஆக 29, 2024 12:00 AM
ADDED : ஆக 29, 2024 11:38 AM
சென்னை:
தங்கள் கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தை மத்திய அரசு சீர்குலைக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் முதல் தவணை நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். நிபந்தனைகளின் அடிப்படையில் தான் கல்வி வளர்ச்சிக்கு நிதி தர முடியும் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. தங்கள் கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தை மத்திய அரசு சீர்குலைக்கிறது. நீட் பிரச்னையைப் போல கல்வி பிரச்னையிலும் திமுக கபட நாடகம் ஆடுகிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர நீட்டை ஒழிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன் ?
மாணவர்கள் நிலைமை
மத்திய கல்வி திட்டத்தில் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கும், கல்வி நிதியை போராடி பெற முடியாத திமுக அரசுக்கும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ., உடன் சமரசம் செய்த முதல்வர் ஸ்டாலின், தமிழக பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்தாதது ஏன்? மத்திய மாநில அரசு இணைந்து நடத்தும் நாடகங்களால் மாணவர்களின் நிலைமை மோசம் அடைந்துள்ளது.
இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.