ரூ.171 கோடியில் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்கள் திறப்பு
ரூ.171 கோடியில் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்கள் திறப்பு
UPDATED : நவ 10, 2024 12:00 AM
ADDED : நவ 10, 2024 09:26 PM
சென்னை:
பள்ளி கல்வித்துறை சார்பில், 171 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பள்ளி கல்வித்துறை வாயிலாக, 29 மாவட்டங்களில், 141 அரசு பள்ளிகளில், 169.26 கோடி ரூபாயில் 745 வகுப்பறைகள், 17 ஆய்வகங்கள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பாச்சேரியில், 94.7 லட்சம் ரூபாய் செலவில் கஸ்துார்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் அடுத்த மலையப்ப நகரில், 95.2 லட்சம் ரூபாயில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயா, உண்டு உறைவிடப் பள்ளி கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. இவற்றை, முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் வழியே திறந்து வைத்தார்.
மேலும், பள்ளி கல்வித்துறையில் பணியின் போது இறந்த 49 பேரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில், 43 இளநிலை உதவியாளர்கள், ஆறு தட்டச்சர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வேலு, பொன்முடி, மகேஷ், தலைமை செயலர் முருகானந்தம், பள்ளி கல்வித்துறை செயலர் மதுமதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கஸ்துார்பா காந்தி பாலிகா வித்யாலயா, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது; நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயா, மத்திய அரசின் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளி.