முன்கூட்டியே விற்பனை செய்துவிட்டு கண்துடைப்புக்கு கவுன்சிலிங் நடத்துவதா?
முன்கூட்டியே விற்பனை செய்துவிட்டு கண்துடைப்புக்கு கவுன்சிலிங் நடத்துவதா?
UPDATED : நவ 10, 2024 12:00 AM
ADDED : நவ 10, 2024 09:35 PM

சென்னை:
முன்கூட்டியே நர்ஸ் பணியிடங்களை விற்பனை செய்துவிட்டு, கண்துடைப்புக்காக இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுவதாக, சீனியர் நர்ஸ்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் உருவாகும் காலி பணியிடங்களை, பொது கவுன்சிலிங் வாயிலாக, மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை நிரப்பி வருகிறது. இந்தாண்டுக்கான பொது கவுன்சிலிங், வரும், 11, 12ம் தேதிகளில், அந்தந்த சுகாதார மாவட்டங்களில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெற உள்ளது.
இடைத்தரகர்
இதில், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், காலி பணியிடங்கள் முன்கூட்டியே விற்பனை செய்யப்பட்டு, கண்துடைப்புக்காக கவுன்சிலிங் நடத்தப்படுவதாகவும், நர்ஸ்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து, சீனியர் நர்ஸ்கள் கூறியதாவது:
நர்ஸ் பணியிட மாறுதல்களை, மருத்துவ ஊரக நல பணிகள் இயக்குனரகம் தான் மேற்கொள்கிறது. இதற்கு முன், அ.தி.மு.க., ஆட்சியில், இடைத்தரகர்கள் வாயிலாக பணியிட மாறுதலுக்கு பணம் பெறப்பட்ட நிலையில், தற்போது அங்குள்ள அதிகாரிகள் நேரடியாகவே பணம் கேட்கும் நிலை உள்ளது.
மருத்துவ தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., வாயிலாக, புதிதாக பணிக்கு சேர்ந்தவர்கள், தங்களது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல, 6 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை கொடுத்து, முன்கூட்டியே இடங்களை பெற்று விட்டனர்.
தற்போது, கணக்கு காட்டுவதற்கு, பணியிட மாறுதல் கவுன்சிலிங் அறிவித்துள்ளனர்.
எவ்வளவு இடங்கள், எந்தந்த பகுதிகளில் காலியாக உள்ளன போன்ற தகவல்களை தெரிவிக்கவில்லை. மாறாக, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள், நீலகிரி, நாகை உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே, காலி பணியிடங்கள் இருப்பதாகக் காட்டப்படும்.
தென்மாவட்டங்களில் உள்ள இடங்கள் பெரும்பாலும், கவுன்சிலிங்கிற்கு முன் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால், பணம் இருப்பவர்கள் மட்டுமே, சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. எங்களை போன்ற பணவசதி இல்லாதவர்கள், பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில், ஒரே இடத்தில் பணிபுரிகிறோம். பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் பணியாற்றும், சீனியர் நர்ஸ்கள் பாதிக்கப்படுகிறோம்.
வெளிப்படைத்தன்மை
அரசு டாக்டர்கள் பணியிட மாறுதலில், எப்படி வெளிப்படைத்தன்மையுடன் எவ்வளவு இடங்கள், எந்தெந்த பகுதிகள் என தெரிவிக்கப்படுகிறதோ, அதேபோல, நர்ஸ்கள் பணியிடங்களையும், கவுன்சிலிங்கிற்கு முன் அறிவிக்க வேண்டும்.
மேலும், சீனியாரிட்டி அடிப்படையில், பணியிட மாறுதல் வழங்கும் வகையில், மாநில அளவில் ஒரே இடத்தில் கவுன்சிலிங் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மருத்துவ ஊரக நல பணிகள் துறை அதிகாரிகள் கூறுகையில், நர்ஸ் பணியிடங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறுவது தவறு. காலிப்பணியிட விபரம், பொது கவுன்சிலிங்கில் வெளியிடப்படும். வெளிப்படை தன்மையுடன் தான் பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது என்றனர்.