UPDATED : மே 20, 2024 12:00 AM
ADDED : மே 20, 2024 09:17 AM
திருப்பூர்:
நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பு நிதியாண்டில், 1.03 சதவீத சரிவு நிலையுடன் துவங்கியுள்ளது. ஒளிமயமான எதிர்காலம் தெரிவதால், அடுத்தடுத்த மாதங்களில் ஏற்றுமதி வளர்ச்சி பெறும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றிலிருந்து உலகம் முழுமையாக மீள்வதற்குள், ரஷ்யா - உக்ரைன் போர் வெடித்தது. அடுத்ததாக, இஸ்ரேல் - காஸா போர் ஏற்பட்டது. இப்படி அடுத்தடுத்து தொடரும் பேரிடர்கள், உலகளாவிய நாடுகளின் பொருளாதாரத்திலும், மக்களின் நுகர்வு தன்மையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவிய ஆயத்த ஆடை வர்த்தகம், இயல்பு நிலையை நோக்கி திரும்பும் வேகம் சற்று குறைந்துள்ளது. குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளின் ஆடை ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சியில் சீரற்ற தன்மையை உருவாக்கிஉள்ளது.
கடந்த 2023 - 24 நிதியாண்டில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடியாக குறைந்தது. ஆனாலும் நடப்பாண்டு பிப்., மார்ச் மாதங்களில் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் படிப்படியான முன்னேற்றம் தெரிந்தது. ஆனாலும் கூட, நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது, 0.64 சதவீதம் என்ற அளவில் சொற்ப அளவே உயர்ந்துள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க இணை பொதுச் செயலாளர் குமார்துரைசாமி கூறியதாவது:
கடந்த 2021 ல் கொரோனா தொற்று முடிந்த உடனே, உலகளாவிய நாடுகள், தங்கள் மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்கிவந்த சலுகைகளை நிறுத்தின. தொடர்ந்து, ரஷ்யா - உக்ரைன் போரால், விலைவாசி உயர்வு, எரிபொருள் விலைகள் உயர்ந்தன.
இதனால், உலகளாவிய மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. குறிப்பாக, மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகள் வாங்குவது குறைந்துள்ளது; குறைந்த விலை ஆடைகள் நுகர்வு அதிகரித்துள்ளது.
இக்கட்டான சூழல்களையெல்லாம் கடந்துவந்தபோது, இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மற்றும் கடல்கொள்ளையர்களால் செங்கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா, அமெரிக்காவுக்கான சரக்கு போக்குவரத்தில் இரண்டு வாரங்கள் வரை காலதாமதம் ஏற்படுகிறது.
வங்கதேசத்தைவிட, நமது நாட்டு ஆடைகளுக்கு 5 முதல் 7 சதவீதம் வரை கூடுதல் விலை நிர்ணயிக்கவேண்டிய கட்டாயநிலை தொடர்கிறது. வங்கதேசத்துக்கு உலகளாவிய நாடுகளில் கிடைத்துவரும் வரிச்சலுகை, வரும், 2027ல் நிறுத்தப்பட்டு விடும். அப்போது, வர்த்தக போட்டியில் சமநிலை உருவாகும்.
உலகளாவிய வர்த்தகர்கள், வங்கதேசத்துக்கு மாற்றாக, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்பு ஆர்டர் வழங்க ஆர்வம் காட்டத் துவங்கி விட்டனர். எனவே, வருங்காலம் பிரகாசமாக அமையும் என்கிற திடமான நம்பிக்கை பிறந்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
உலகளாவிய வர்த்தகர்கள், வங்கதேசத்துக்கு மாற்றாக, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்பு ஆர்டர் வழங்க ஆர்வம் காட்டத் துவங்கி விட்டனர்