சுதந்திர தினம்: முதல்வர் மருந்தக திட்டம் அறிவிப்பு
சுதந்திர தினம்: முதல்வர் மருந்தக திட்டம் அறிவிப்பு
UPDATED : ஆக 15, 2024 12:00 AM
ADDED : ஆக 15, 2024 05:52 PM

சென்னை:
நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின், சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி காலை 7.30 மணியளவில் டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சுதந்திரத்திற்காக போராடியவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதியேற்போம். மூவர்ணத்தை கொண்ட நமது தேசியக்கொடி பன்முகத்தன்மை கொண்டதாகும். மாநிலங்களுக்கு தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. இதுவும் ஒரு விடுதலை போராட்டம் தான். மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வேண்டும் என்பது குறித்த போராட்டம்.
இந்தியாவில் பிற மாநிலங்களைக் காட்டிலும், தியாகிகளை போற்றுவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்திய ராணுவத்தை உருவாக்கியபோது நேதாஜியுடன் கரம் கோர்த்தவர்கள் தமிழர்கள். 2021ல் தி.மு.க., ஆட்சியமைந்தது முதல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.,க்கு கோவையில் திருவுருச் சிலை, விடுதலைப்போராட்ட அஞ்சலையம்மாளுக்கு கடலூரில் திருவுருவச்சிலை, ரெட்டமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம், தூத்துக்குடியில் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோருக்கு சிலை அமைக்கப்பட்டிருப்பதாக பட்டியலிட்டார்.
75 ஆயிரம் பணியிடங்கள்
2026 ஜனவரி மாதத்திற்குள் 75 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம், 14,54,712 பேர் நேரடியாகவும், 12 லட்சத்தி 35 ஆயிரத்து 945 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை பெறுகின்றனர். முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும். பொங்கல் முதல் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.