லாப நோக்கில் பாடப் புத்தகங்கள் விலை உயர்த்தப்படவில்லை: அமைச்சர்
லாப நோக்கில் பாடப் புத்தகங்கள் விலை உயர்த்தப்படவில்லை: அமைச்சர்
UPDATED : ஆக 15, 2024 12:00 AM
ADDED : ஆக 15, 2024 08:42 PM

திருச்சி:
2018ம் ஆண்டுக்கு பின் விலை உயர்வை ஒப்பிட்டு பார்க்கும் போது, லாப நோக்கில் பாடப் புத்தகங்கள் விலை உயர்த்தப்பட வில்லை. என பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
கனரா வங்கி சார்பில், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவியருக்கு டாக்டர் அம்பேத்கர் வித்யா ஜோதி கல்வித்தொகை வழங்கும் விழா நடந்தது.
விழாவில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் , செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விலை உயர்வு தொடர்பாக, பாட நுால் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆட்சியில், 2013- -14ம் ஆண்டுகளில், மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தின் போது, பாட புத்தகங்கள் 350 முதல் 400 மடங்கு வரை விலை உயர்த்தப்பட்டது. 2018ம் ஆண்டிலும் 466 மடங்கு விலை உயர்த்தப்பட்டது.
பொதுவாக, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை விலை உயர்வு இருக்கும். ஆனால், 2018 ம் ஆண்டுக்கு பிறகு விலை உயர்த்தப்படாமல் இருந்தது. 2018 ம் ஆண்டுக்கு பின் விலை உயர்வை ஒப்பிட்டு பார்க்கும் போது, லாப நோக்கில் பாடப் புத்தகங்கள் விலை உயர்த்தப்படவில்லை.
தமிழகத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா புத்தகங்கள் தான் வழங்கப்படுகிறது. தற்போது, 21 சதவீதம் மட்டுமே விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.
மூலப் பொருட்களான காகிதம் 63 சதவீதம் அட்டை 33 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே, புத்தகங்கள் விலை உயர்வு செய்யப்படுகிறது. இதனால் ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை. .
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.