இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் வந்தாச்சு! வரியை குறைத்து கையெழுத்து
இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் வந்தாச்சு! வரியை குறைத்து கையெழுத்து
UPDATED : பிப் 08, 2026 07:31 PM
ADDED : பிப் 08, 2026 07:35 PM
புதுடில்லி:
இந்தியா - அமெரிக்கா இடையேயான இடைக்கால, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் செயல் திட்டம் குறித்து, இரு நாடுகளின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய பொருட்களுக்கு இறக்குமதி வரி 50 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில், ஒப்பந்தத்தின் நுணுக்கமான விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியா - அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கான செயல் திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில், இரு நாடுகளும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
இதன் வாயிலாக, இரு நாடுகளும் முழுமையான வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி, மேலும் ஒரு படி முன்னேறியுள்ளன.
இந்த இடைக்கால செயல் திட்டம், சுங்க வரிகளை குறைப்பதோடு, எரிசக்தி துறையில் உறவுகளை மறுசீரமைத்து, பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
உலகளாவிய வினியோக தொடர்களை மறுசீரமைக்க இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வரும் சூழலில், இந்த வர்த்தக ஒப்பந்த செயல் திட்டம் ஏற்பட்டுள்ளது.
'பரஸ்பரம் இருதரப்புக்கும் பயனளிக்கும் வர்த்தகத்துக்கான இடைக்கால ஒப்பந்த கட்டமைப்பில், இரு நாடுகளும் உடன்பாடு ஒன்றை எட்டியிருப்பதை அறிவிப்பதில் அமெரிக்கா மற்றும் இந்தியா மகிழ்ச்சி அடைகின்றன' என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி உயரும்
இந்த செயல் திட்டம், விரிவான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை செயல் படுத்துவதை உறுதிப்படுத்துகிறது. இந்த இடைக்கால ஒப்பந்தம் வாயிலாக, இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அமெரிக்க இறக்குமதி வரி, 50 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.எம்.இ., எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 30 டிரில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 2,700 லட்சம் கோடி ரூபாயில் சந்தைகள் திறக்கப்படும் என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் இந்த வர்த்தக ஒப்பந்த செயல் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி, பரஸ்பர நன்மை தரும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூட்டறிக்கை கூறுகிறது.
அமெரிக்க வரி குறையும்
ஒப்பந்தத்தின் படி, அமெரிக்காவின் அனைத்து தொழில்துறை பொருட்களுக்கும், மேலும் பல்வேறு அமெரிக்க உணவு மற்றும் விவசாய பொருட்களுக்கும் இந்தியா சுங்க வரிகளை நீக்கவோ அல்லது குறைக்கவோ ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது
கால்நடை உணவுக்கான உலர்ந்த, 'டிஸ்டிலர்ஸ் கிரெயின்ஸ்' மற்றும் சிவப்பு சோளம், கொட்டை ரகங்கள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் மது சார்ந்த பானங்கள் உள்ளிட்டவற்றுக்கும் வரி குறையும்
இந்த ஒப்பந்த செயல் திட்டத்தின் கீழ், 'இந்தியாவில் தயாரிக்கப்படும் சில விமானங்கள் மற்றும் விமான பாகங்களுக்கும் சுங்க வரிகளை நீக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
'அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தேவைகளுக்கு ஏற்ப, வாகன உதிரி பாகங்களுக்கு விதிக்கப்படும் வரியில், இந்தியாவுக்கு முன்னுரிமை கொண்ட சுங்க ஒதுக்கீடு வழங்கப்படும்' என, கூட்டறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக, இந்தியா மீது அமெரிக்கா கடந்த ஆண்டு ஆகஸ்டில், 25 சதவீத கூடுதல் வரி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா இருப்பதால், 50 சதவீத சுங்க வரி விதிப்பு, இந்திய ஏற்றுமதியாளர்களை கடுமையாக பாதித்தது.
தற்போது வரி குறைக்கப்படுவதால், துணி மற்றும் ஆடை, தோல் மற்றும் காலணி, பிளாஸ்டிக் மற்றும் ரப்பர், வேதிப்பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள், சில வகை இயந்திரங்கள் போன்ற தொழிலாளர் அடிப்படையிலான துறைகளின் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவு பெற்றால், பொது மருந்துகள், ரத்தினங்கள் மற்றும் வைரங்கள், விமான பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு அமெரிக்காவில் சுங்க வரி பூஜ்ஜியமாக குறைக்கப்படும். இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்திறன் மேலும் உயர்ந்து, 'மேக் இன் இந்தியா' முயற்சிக்கு கூடுதல் ஊக்கம் கிடைக்கும்.
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து, 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிசக்தி பொருட்கள், விமானங்கள் மற்றும் உதிரி பாகங்கள், மதிப்புமிக்க உலோகங்கள், தொழில்நுட்ப பொருட்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூட்டறிக்கை தெரிவிக்கிறது.
தரவு மையங்களில் பயன்படுத்தப்படும் ஜி.பி.யு., எனப்படும், 'கிராபிக்ஸ் புராசசிங் யூனிட்டு'கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட்களின் வர்த்தகமும், அதோடு இணைந்த தொழில்நுட்ப ஒத்துழைப்பும் அதிகரிக்கும்.
மீண்டும் இதற்கிடையே, அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்ட நிர்வாக உத்தரவின்படி, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை நேரடியாகவோ மறைமுகமாகவோ இறக்குமதி செய்வதை நிறுத்த இந்தியா உறுதி அளித்துள்ளது.
இதை கவனத்தில் கொண்டு இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கூடுதல் 25 சதவீத சுங்க வரி, பிப்., 7 முதல் நீக்கப்படுகிறது. இது மீறப்பட்டால், மீண்டும் கூடுதல் சுங்க வரி விதிக்கப்படும்.
மேலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் கட்டமைப்புக்கும் இந்தியா ஒப்புக் கொண்டு உள்ளது.
இந்த இடைக்கால ஒப்பந்தத்தின் செயல் திட்டம், சட்டப்பூர்வ ஒப்பந்தமாக மாற்றப்பட்டு, மார்ச் மாத மத்தியில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் கூறுகையில், “இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக எம்.எஸ்.எம்.இ., விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு, மிகப்பெரிய அமெரிக்க சந்தையை திறக்கும்,” என்றார்.
பிரதமர் மோடி வரவேற்பு
இந்தியா- அமெரிக்கா இடையிலான இடைக்கால, இருதரப்பு வர்த்தக ஒப்பந்த செயல் திட்டத்தை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் கூறியுள்ளதாவது:
இந்தியாவும், அமெரிக்காவும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கான செயல் திட்டத்தை இறுதி செய்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே உறவை பலப்படுத்த அதிபர் டிரம்ப் தனிப்பட்ட முறையில் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி. இந்த செயல் திட்டம், இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் கடின உழைப்பாளிகளான விவசாயிகள், தொழில் முனைவோர், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் புதுமையாளர்கள், மீனவர்கள் ஆகியோருக்கு வாய்ப்புகளை வழங்குவதன் வாயிலாக இந்த செயல் திட்டம், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை வலுப்படுத்துகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

