உலகின் முதல் காவியம் கில்கமெஷ் வாசித்தால் சொல்வீர்கள் பேஷ் பேஷ்!
உலகின் முதல் காவியம் கில்கமெஷ் வாசித்தால் சொல்வீர்கள் பேஷ் பேஷ்!
UPDATED : பிப் 08, 2026 07:35 PM
ADDED : பிப் 08, 2026 07:37 PM
வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் தமது அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். கோவை வானொலி நிலைய முன்னாள் இயக்குனர் ஸ்டாலின் தமிழில் மொழிபெயர்த்த உலகின் முதல் காவியமான 'கில்கமெஷ்' நுால் குறித்து, இலக்கிய திறனாய்வாளர் பஞ்சம் மணியன் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
யூப்ரடீஸ் டைகிரீஸ் நதிக்கரையில் தோன்றிய மெசபடோமிய நாகரிகத்தின் வரலாற்று பொக்கிஷம் கில்கமெஷ் காவியம். கிரேக்க நாடகங்களை தமிழாக்கம் செய்துள்ள ஸ்டாலின், இந்த காவியத்தையும் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். கில்கமெஷ் காவியம் பல நுாற்றாண்டுகளாக வாய்மொழி இலக்கியமாக இருந்துள்ளது. அதனால் இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை.
'க்யூனிபார்ம்' என்ற எழுத்து வடிவத்தில் இன்றைய மத்திய கிழக்கில் கி.மு. 3000 ஆண்டுக்கு முன், களிமண் தட்டுகளில் எழுதப்பட்ட காவியத்தை, சுமேரியர்கள் வழிவழியாக பாதுகாத்து வந்தனர். 'க்யூனிபார்ம்' மொழியை கற்று, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜார்ஜ் ஸ்மித். அதன் பிறகே கில்கமெஷ் காவியம் உலகின் கவனத்துக்கு வந்தது.
ஊருக் என்ற ஊரில் கில்கமெஷ் என்ற மன்னன் கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறான். மக்கள் கடவுளிடம் முறையிடுகின்றனர். கடவுள், என்கிடு என்ற ஒரு மனிதனை படைக்கிறார். காட்டில் விலங்குகளுடன் வாழும் என்கிடுவை வேடன் ஒருவன் அடையாளம் கண்டு, ஊருக் நகருக்கு அழைத்து வருகிறான். மன்னனும் என்கிடுவும் சந்திக்கின்றனர். அப்போது, என்கிடுவை ஏற்னவே கனவில் கண்டது கில்காமெஷுக்கு ஞாபகம் வருகிறது. மோதலுக்கு பதில் இருவருக்கும் இடையில் நட்பு வளர்கிறது.
11 களிமண் சுவடிகளில் இருந்து தொகுக்கப்பட்ட இந்த காவியம், நட்புக்கு இலக்கணமாக உள்ளது. துரியோதனன், கர்ணன், சீசர், புரூட்டஸ், கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் போன்ற, நட்பு இலக்கணமாக வாழ்ந்த மன்னர்களின் வரிசையில் கில்கமெஷ், என்கிடு இடம் பிடிக்கின்றனர்.
பழமையான மொழியில் கவிதையாக எழுதப்பட்ட காவியம் இது. தமிழ் வாசகர்கள் புரிந்து ரசிக்க ஏதுவாக, வரிகளின் அர்த்தம் சிதையாமல், இலக்கிய நயத்துடன் ஸ்டாலின் மொழி பெயர்த்து இருக்கிறார். சுருக்கமான விளக்க உரையும் தந்திருக்கிறார்.
கவித்துவத்தின் சாரத்தில் மனம் மயங்கினாலும், பெயர்கள், இடங்கள் அதற்கான குறிப்புகளை நினைவில் வைப்பது கடினமாக உள்ளது. களிமண் சுவடிகளில் கிடைத்த ஆதாரங்களை பட்டியலிட்டுள்ளார்.
உலக இலக்கியத்தில் கிரேக்க காவியங்களுக்கு தனி இடம் உண்டு. மெசபடோமியாவின் பழம்பெரும் இலக்கியமாக போற்றப்படும் கில்கமெஷ் அந்த வகையில் முக்கியமான படைப்பு. சாகித்ய அகாடமி, இந்த மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளது. தமிழ் வாசகர்கள் படித்து மகிழலாம்.

