அரசு பெண்கள் பள்ளியில் நர்சிங் தொழிற்கல்வி துவக்கம்
அரசு பெண்கள் பள்ளியில் நர்சிங் தொழிற்கல்வி துவக்கம்
UPDATED : ஆக 06, 2024 12:00 AM
ADDED : ஆக 06, 2024 09:08 AM
ஆனைமலை:
ஆனைமலை அருகே, கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நர்சிங் தொழிற்கல்வி பாடப்பிரிவு துவங்கப்பட்டது.
ஆனைமலை அருகே, கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் பகுதியை சேர்ந்த மாணவியர், பத்தாம் வகுப்பு முடித்ததும், நர்சிங் படிக்க, கோவை, பொள்ளாச்சி மற்றும் உடுமலை செல்லும் நிலை உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவியர், குடும்ப சூழல் காரணமாக, வெளியூர் சென்று நர்சிங் பாடம் பயில முடிவதில்லை.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவியர் நலன் கருதியும், எதிர்கால வேலைாவய்ப்பினை கருத்தில் கொண்டு, நடப்பு கல்வியாண்டில், நர்சிங் தொழிற்கல்வி பாடப்பிரிவு, கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்க பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு வாயிலாக தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை அனுமதியுடன், பள்ளியில், பிளஸ்1 மாணவர்களுக்கான, நர்சிங் என்ற புதிய பாடப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில், இப்பாடப்பிரிவு பள்ளியில் மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இப்பாடப்பிரிவு துவக்க விழாவில், பள்ளி தலைமையாசிரியர் சிவப்பிரியா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். துணை தலைவர் தர்மு முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.