புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது மாணவர் விபரம் பதிவு தீவிரம்
புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது மாணவர் விபரம் பதிவு தீவிரம்
UPDATED : ஆக 06, 2024 12:00 AM
ADDED : ஆக 06, 2024 09:09 AM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கல்வி மாவட்ட அரசு பள்ளிகளில், புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு தகுதியான மாணவர்கள் கண்டறியப்பட்டு, பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
தேசிய அறிவியல் புத்தாக்க துறை மற்றும் தேசிய புத்தாக்க ஆய்வு நிறுவனத்துடன், மாநில பள்ளிக்கல்வித்துறை இணைந்து, பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு திறனை வெளிக்கொணர, 2009 முதல், புத்தாக்க ஆய்வு விருது போட்டி நடத்தி வருகிறது.
அவ்வகையில், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2024--25ம் கல்வியாண்டின் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு மாணவர் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், புதிய மாணவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களின் விபரம், www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது. குறிப்பாக, 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களில், வகுப்புக்கு ஒருவர் வீதம் ஐந்து பேர், நடுநிலைப் பள்ளிகளில் மூன்று பேரின் விபரம் பதிவு செய்யப்படுகிறது.
அதில், மாணவர்களின் மொபைல்போன் எண், ஓராண்டு அல்லது இரு ஆண்டு தொடர்புக்கு ஏற்ப பதிவு செய்யப்படும். மாணவரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பதிவு செய்த மாணவர்களின் ஆய்வுகள், புதியதாக, சிறப்பாக அமைந்தால் மட்டுமே தேர்வு செய்யப்படும்.
ஒவ்வொருவருக்கும் தலா, 10 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். வரும் செப்., 15ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் திறன் அறிந்து, பதிவு செய்யும் பணி அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
இவ்வாறு, கூறினர்.