விஜயநகர பேரரசு நாயக்கர் காலத்து கல்வெட்டு பட்டயப்படிப்பு மாணவர்கள் கள ஆய்வு
விஜயநகர பேரரசு நாயக்கர் காலத்து கல்வெட்டு பட்டயப்படிப்பு மாணவர்கள் கள ஆய்வு
UPDATED : ஏப் 06, 2024 12:00 AM
ADDED : ஏப் 06, 2024 09:14 AM

கிருஷ்ணகிரி:
பாகல்பட்டியில், விஜயநகர பேரரசு -நாயக்கர் காலத்து கல்வெட்டை, துறை மாணவர்கள் ஆய்வு செய்தனர்.
திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியின் கீழ் இயங்கும், கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மைத்துறை பட்டயப்படிப்பு மாணவர்கள், 15 பேர் கொண்ட குழுவினர், பேராசிரியர் ரவியின் தலைமையில், களப்பணி ஆய்வு பயணமாக, கிருஷ்ணகிரி வந்தனர். வழியில், தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையின் இடது ஓரத்தில், பாகல்பட்டி கிராமத்தின் அருகே சென்றாய பெருமாள் கோவில் வாயிலில், 5 நடுகற்கள் இருந்தது தெரியவந்தது. அதை, கல்வெட்டியியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் ஆய்வு செய்தனர்.
இது குறித்து, பேராசிரியர் ரவி கூறியதாவது:
கண்டறியப்பட்ட, 5 நடுகற்களும், 16 அல்லது, 17ம் நுாற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு -நாயக்கர் காலத்தவை. போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளன. முதல் நடுகல்லில், ஒரு வீரன் வாளை நேராக உயர்த்தி பிடித்தபடி, கச்சையில் குறுவாளும், இடது கையில் கேடயமும், வலது கையில் வீரவாளை தலைக்கு மேல் உயர்த்தி வீசும் காட்சி உள்ளது.
வீரன் அருகே மனைவி, குழந்தை உள்ளனர். இதிலிருந்து வீரன் இறந்த பின் அவர்களும், உடன் கட்டை ஏறியிருக்கக்கூடும் என அறியலாம். 5ல், 3 நடுகற்கள் கணவன் இறந்ததால், மனைவியும் உடன்கட்டை ஏறியதை குறிக்குமாறு, வீரனின் அருகில் பெண் உருவத்தோடு உள்ளது. இவற்றை, சதி கல் என அழைப்பர்.
நடுகற்களுள் ஒன்று, பன்றியோடு போரிட்டு மடிந்த வீரனுக்கும், மற்றொன்று, காளையோடு போரிட்டு மடிந்த வீரனுக்கும் எடுக்கப்பட்டுள்ளன. இவை, பன்றி குத்திப்பட்டான் கல், காளை குத்திப்பட்டான் கல் என தெரிய வருகிறது. ஐந்தாவது கல்லில், நீண்ட தாடியுடன் குத்துவாள் இடது கரத்திலும், கொடுவாளினை வலது கரத்திலும் ஏந்தியவாறு, சண்டைபுரியும் வீரனின் உருவம் என அனைத்தும், புடைப்பு சிற்பங்களாக உள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.