UPDATED : ஏப் 06, 2024 12:00 AM
ADDED : ஏப் 06, 2024 09:16 AM

மாமல்லபுரம்:
தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் பூம்புகார் நிறுவன கைவினைப் பொருட்கள் விற்பனையகம் மற்றும் அர்பன் ஹட் எனப்படும் நகர்ப்புற சந்தைத்திடல் வளாகம் மாமல்லபுரத்தில் உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகஇடத்தில், வாடகைக்கு இயங்குகிறது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களின் கைவினைப் பொருட்கள் விற்பனை கருதி, கைவினைக் கலைஞர்கள் அவ்வப்போது இங்கு கண்காட்சி நடத்துவர்.
பூம்புகார் விற்பனையகம், கடற்கரை கோவில் அருகில், தனியார் இடத்தில் நீண்டகாலமாக இயங்கியது. கடந்த 2022ல், கிழக்கு கடற்கரை சாலை வளாகத்திற்கு மாற்றப்பட்டது. விற்பனையகம், சிற்ப பகுதிகளுக்கு அப்பால், நகரிலிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளதால், சுற்றுலா பயணியர் அறியாமல், தனியாரிடமே கைவினைப் பொருட்களை வாங்கும் நிலை உள்ளது.
பயணியர் வருகை அதிகரித்துள்ள நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் விற்பனையகம் இயங்குவதை பயணியர் அறியவும், அவர்களை கவரவும், அதை மேம்படுத்துவது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும்பயணியர் கவனிக்கும் வகையில், முதலில் நுழைவாயில் அமைக்கப்பட்டது.
தற்போது, வாயிலில் பயணியரை வரவேற்கும் கரக நாட்டியக் கலைஞர்கள், வளாகத்தில் இளைஞர்கள் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, ஏரில் பூட்டப்பட்ட மாடுகள், மாட்டு வண்டி, மான்கள், கொக்குகள் ஆகிய சுதை சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுளளன. அவைசுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தன.