UPDATED : ஏப் 06, 2024 12:00 AM
ADDED : ஏப் 06, 2024 09:17 AM

உடுமலை:
மாணவர்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில், பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள மதுக்கடையை இடம் மாற்ற, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலையில், பார்க் ரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மேலும், இப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் உள்ளது. தவிர, அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், ஆசிரியர்களுக்கான கூட்டங்களும் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இவ்வாறு முக்கியத்துவம் உள்ள அரசு பள்ளி, பாதுகாப்பில்லாத சூழலில் இருப்பது பெற்றோருக்கு தினமும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பள்ளியிலிருந்து சிறிது துாரத்தில், ராஜேந்திரா ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. பள்ளி அமைந்திருக்கும் பகுதியில் அக்கடை இருப்பதால், சுற்றுப்பகுதியை குடிமகன்கள் இளைப்பாறும் இடமாக, பயன்படுத்துகின்றனர்.
பார்ப்பதும், கேட்பதும் எளிதில் பதியக்கூடிய வயதில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு, அவர்கள் பள்ளிக்கு அருகில் அரைகுறை ஆடைகளுடன் கிடப்பதும், தகாத வார்த்தைகளை பேசிச்செல்வதும் மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். பள்ளியின் கட்டமைப்பு, கல்வித்தரம் அனைத்தை விடவும், அவர்களின் பாதுகாப்புதான் பெற்றோருக்கு முதன்மையாக இருக்கிறது. பள்ளிகளின் மீது கவனம் செலுத்தும் அரசு, பள்ளிகள் அமைந்திருக்கும் சுற்றுப்பகுதிகளில் அலட்சியமாக உள்ளது.
இப்பள்ளிக்கு எதிரே நகராட்சி பூங்கா செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் குடிமகன்கள் தாராளமாக அவ்விடத்தை பயன்படுத்துகின்றனர். பள்ளி குழந்தைகளுக்கு இடையூறாக உள்ள மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, குழந்தைகளை நம்பிக்கையுடன் பள்ளிக்கு அனுப்ப முடியும் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் கூறியதாவது:
பள்ளியின் மீதுள்ள நம்பிக்கையால் மாணவர்களை சேர்த்தாலும், நாள்தோறும் அவர்கள் பாதுகாப்புடன் பள்ளிக்குச்சென்று வீடுதிரும்ப வேண்டும் என அச்சத்துடனே இருக்க வேண்டியுள்ளது. பள்ளியின் அருகில் குடிமகன்கள் நிலையில்லாமல் விழுந்து கிடப்பது, உற்சாகத்துடன் பள்ளிக்கு வர வேண்டிய குழந்தைகள் மனதில் பயத்தை உண்டாக்குகிறது. போலீசாருக்கு புகார் அளித்தாலும், சிறிது நாட்கள் தொல்லை இல்லாமல் இருந்தாலும், மீண்டும் பள்ளியை சுற்றி ஆக்கிரமித்துக்கொள்வது தொடர்கிறது.
சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு, எதிரான வன்முறை சம்பவங்களை நாள்தோறும் படிக்கும்போது, மனதில் ஒருவிதமான பயம் தோன்றுகிறது. ஆனால், பள்ளிக்கு அருகில் சுதந்திரமாக அவர்கள் நடமாடுகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த, கட்டாயம் ராஜேந்திரா ரோடு மதுபானக்கடையை இடம் மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, பெற்றோர் கூறினர்.