UPDATED : செப் 04, 2024 12:00 AM
ADDED : செப் 04, 2024 08:16 AM

கோவை:
சர்வதேச அளவில் ஜப்பான் நாட்டில் நடந்த, ரோபோட்டிக்ஸ் போட்டி இறுதிச்சுற்றில், கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள், முதலிடத்தை பெற்று அசத்தியுள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மெய்ஜி பல்கலையில் கடந்த ஆக., 29 முதல் செப்., 1 வரை, ஐ. இ. இ.இ., கூட்டமைப்பு சார்பில், புதுமை மற்றும் பொறியியல் ஆற்றல் மையமாகக் கொண்டு, ரோபோடிக்ஸ் கண்டுபிடிப்பு சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டியில் பங்கேற்ற கலைஞர் கருணாநிதி கல்லுாரி மாணவர்கள், நீர் மூழ்கி ரோபோட் படைப்பை காட்சிப்படுத்தி, செயல் விளக்கம் அளித்தனர். இதற்கு சர்வதேச அளவில் முதலிடம் வழங்கப்பட்டது.
கண்டுபிடிப்பை உருவாக்கிய, பேராசிரியர் அறிவுமணி ராவணன் தலைமையில், மாணவர்கள் குழு தயாளன், கிளாட்சன்பால், அபினேஷ், கனிஷ்கா ஆகியோரை கல்லுாரியின் நிறுவனத்தலைவர் பழனிசாமி, துணைத்தலைவர் இந்து முருகேசன், சி.இ.ஓ., மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ் பாராட்டினர்.