சர்வதேச ஜவுளி கண்காட்சி ஆடை ஏற்றுமதி வர்த்தகம் உயரும்
சர்வதேச ஜவுளி கண்காட்சி ஆடை ஏற்றுமதி வர்த்தகம் உயரும்
UPDATED : மே 20, 2024 12:00 AM
ADDED : மே 20, 2024 09:20 AM
திருப்பூர்:
சர்வதேச கண்காட்சிகளை சரிவர பயன்படுத்தினால், ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் உயர வாய்ப்புள்ளதாக, ஏ.இ.பி.சி., தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்கா பண வீக்கம் என, பல்வேறு காரணங்களால், கடந்த ஓராண்டாக ஏற்றுமதி வர்த்தகம் மந்தநிலையில் இருந்தது. கடந்த, பிப்., மற்றும் மார்ச் மாதங்களில், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியது.
நிதியாண்டின் துவக்கமான ஏப்., மாதத்தில், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம், 6.88 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, அனைத்து வணிக பொருட்கள் ஏற்றுமதியில், 1.08 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
அதாவது, கடந்த, 2023 ஏப்., மாதம், 2 லட்சத்து, 90 ஆயிரத்து, 808 கோடி ரூபாயாக இருந்த, ஒட்டுமொத்த ஏற்றுமதி வர்த்தகம், இந்தாண்டு உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த மாதம் மட்டும், ஏற்றுமதி வர்த்தகம், 2 லட்சத்து, 93 ஆயிரத்து, 916 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது.
குறிப்பாக, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில், மட்டும், 25.8 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்., மாதம், 17 ஆயிரத்து, 724 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி, கடந்த மாதம், 22 ஆயிரத்து, 260 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) அதிகாரிகள் கூறியதாவது:
அமெரிக்கா உள்ளிட்ட இறக்குமதி நாடுகளில் இயல்புநிலை திரும்பியுள்ளது; பொருளாதாரமும் சீராகி விட்டது. சீனாவுக்கு மாற்றாக, வளர்ந்த நாடுகள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
இதனால், புதிய ஆர்டர்கள் கிடைக்கிறது. சர்வதேச அளவிலான வர்த்தக மந்தநிலை மாறிவிட்டதால், இயல்புநிலை திரும்புகிறது; புதிய வளர்ச்சி வாய்ப்புகளும் கைகொடுக்கிறது. சர்வதேச கண்காட்சிகளை சரிவர பயன்படுத்தினால், ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.