இந்தியாவில் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை: எலான் மஸ்க் நிறுவனத்துக்கு அனுமதி
இந்தியாவில் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை: எலான் மஸ்க் நிறுவனத்துக்கு அனுமதி
UPDATED : ஜூலை 10, 2025 12:00 AM
ADDED : ஜூலை 10, 2025 05:35 PM
புதுடில்லி:
இந்தியாவில் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை வழங்க, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.
நாட்டின் செயற்கைக்கோள் இணைய சேவை சந்தை விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தனியார் துறையும் செயற்கைக்கோள் சேவைகளை வழங்க அனுமதிக்கும் விதமாக, கடந்த 2023ல் மத்திய அரசு இந்திய விண்வெளி கொள்கையை வெளியிட்டது. இதையடுத்து, பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
ஏற்கனவே, ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கான ஒப்புதலை பெற்றுள்ள நிலையில், ஸ்டார்லிங்க், குய்பர் ஆகிய நிறுவனங்களின் விண்ணப்பங்கள் டிராய் அமைப்பின் பரிசீலனையில் உள்ளன. கடந்த மே மாதம் 7ம் தேதி மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு முதற்கட்ட அனுமதி வழங்கி கடிதம் அளித்தது.
இந்நிலையில் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை வழங்கும் திட்டத்துக்கு நாட்டின் விண்வெளி ஒழுங்குமுறை அமைப்பான இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACE) முறையான அனுமதியை வழங்கி உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் வணிக ரீதியில் செயற்கைகோள் இணைய சேவை வழங்கும் அந்த நிறுவனத்துக்கு இருந்த தடை நீங்கி உள்ளது. இனிமேல், இந்தியாவில் சேவையை துவக்குவதற்கு ஸ்டார்லிங்க் நிறுவனம் அரசிடம் இருந்து ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை வாங்கவேண்டும். தரைவளியிலான உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டி உள்ளது.
இந்த அனுமதியானது ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும். செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை வழங்க 4,408 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளன. இந்த அனுமதி மூலம் இந்தியாவில் இணைய வழி சேவையில் பெரும் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.