மத்திய நிதி திட்டங்களைப் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள்
மத்திய நிதி திட்டங்களைப் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள்
UPDATED : ஜூலை 10, 2025 12:00 AM
ADDED : ஜூலை 10, 2025 04:33 PM

சென்னை:
தமிழ்நாட்டின் அனைத்து 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் மத்திய அரசின் நிதிச் சார்ந்த திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், நிதி சேவைகள் துறை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறுகின்றன.
ஜூலை 1 முதல் செப்டம்பர் 30, 2025 வரை நடைபெறும் இந்த முகாம்கள், மாநிலத்தின் 38 மாவட்டங்களில் நடைபெறவுள்ளன.
இந்த முகாம்களில், பிரதமரின் மக்கள் வங்கி கணக்கு (ஜன் தன்), ஆயுள் காப்பீடு, பயிர் காப்பீடு, அடல் ஓய்வூதிய திட்டம் போன்ற நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு புதிய கணக்குகள் திறக்கப்படுவதைத் தொடர்ந்து, பரிவர்த்தனை இல்லாத கணக்குகளுக்கான கேஒய்சி புதுப்பித்தல், வாரிசுதாரர் விவரங்களை புதுப்பித்தல், உரிமை கோரப்படாத வைப்புத் தொகைகளை கணக்கீடு செய்தல், மின்னணு மோசடி பற்றிய விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முக்கியமாக, அனைத்து தகுதியான நபர்களும் அரசு நலத்திட்டங்களின் நன்மைகளை முழுமையாக பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதே இந்த முகாம்களின் இலக்காகும்.