UPDATED : ஆக 22, 2024 12:00 AM
ADDED : ஆக 22, 2024 12:17 PM
தானே:
மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில், 4 வயது சிறுமியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தில், வன்முறை வெடித்ததை அடுத்து, அந்தப் பகுதியில் இணைய சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா - பா.ஜ., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தானே மாவட்டத்தின் பத்லாபூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 4 வயது சிறுமியர் இருவரை, அந்தப் பள்ளியின் துப்புரவு தொழிலாளர் அக் ஷய் ஷிண்டே என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமியர், இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள், தனியார் பள்ளியை சூறையாடியதுடன், பத்லாபூரின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.
பத்லாபூர் ரயில் நிலையத்தில் நடந்த போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், இரு தரப்பிலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி முதல்வர், வகுப்பு ஆசிரியர், பெண் உதவியாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். துப்புரவு தொழிலாளர் அக் ஷய் ஷிண்டேவை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், பத்லாபூரில் சட்டம் - ஒழுங்கு நிலைமையை கட்டுக்குள் வைக்க, இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், நகரில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் நேற்று மூடப்பட்டிருந்தன.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
பத்லாபூரில் சட்டம் - ஒழுங்கை கண்காணிக்க, அதிகளவில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது; இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது.
போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக, பத்லாபூரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரானதும், இணைய சேவை மீண்டும் வழங்கப்படும்.
வன்முறை சம்பவங்களில், 25க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இது தொடர்பாக, 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், குற்றவாளிகளை கைது செய்து வருகிறோம்.
இதற்கிடையே, சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்த அக் ஷய் ஷிண்டேவை, வரும் 26 வரை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசாருக்கு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
பத்லாபூரில் நடந்த போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதில் பங்கேற்றவர்கள், உள்ளூர் மக்களே அல்ல. மஹாராஷ்டிர அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே, எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்தை துாண்டி விட்டுள்ளன. இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும்.