சத்துமாவு பயனாளிகளின் கருவிழி பதிவு; அங்கன்வாடி ஊழியர்கள் எதிர்ப்பு
சத்துமாவு பயனாளிகளின் கருவிழி பதிவு; அங்கன்வாடி ஊழியர்கள் எதிர்ப்பு
UPDATED : டிச 06, 2024 12:00 AM
ADDED : டிச 06, 2024 09:06 AM
மதுரை:
தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. கர்ப்பிணிகள், பள்ளி வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கற்பித்தல், ஊட்டச்சத்து வழங்குதல் என மாநிலம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்கள் உள்ளன.
கர்ப்பிணிகள், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் சத்துப் பொருட்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் அடங்கிய சத்து மாவை 15 நாட்களுக்கு ஒருமுறை இம்மைய ஊழியர்கள் வழங்குகின்றனர். இதனை பயனாளியின் அலைபேசியில் ஓ.டி.பி., பெற்றுபதிவு செய்கின்றனர்.
இம்மாதம் முதல் பயனாளிகளின் கருவிழியையும் பதிவு செய்ய வேண்டும் என இயக்குனரகம் கூறியுள்ளது. இந்தப் பதிவில் சிக்கல் இருப்பதால் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுவரை ஒரு குடும்பத்தில் யாரும் சத்துமாவை பெற இயலும். கருவிழிப் பதிவால் சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், குழந்தைகள் மட்டுமே பெற முடியும்.
சத்துமாவு பெறும் பயனாளிகள் பெரும்பாலும் நலிவடைந்த பிரிவினரே உள்ளனர். பழைய அலைபேசியை பயன்படுத்தும் அவர்களிடம் ஓ.டி.பி., பெறுவது சிரமம்.
அங்கன்வாடி ஊழியர்கள் பலரிடமும் பழைய அலைபேசி, 2ஜி போன் இணைப்பு என உள்ளதால் 'சிக்னல்' கிடைத்து பதிவிடுவதில் சிக்கலை சந்திக்கின்றனர். எனவே கருவிழி பதிவை மேற்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் வரதலட்சுமி கூறியதாவது:
முன்பு ஓ.டி.பி., மூலம் பதிவு செய்வதே பெரும்பாடாக இருந்தது. தற்போது கருவிழி பதிவு என்பது சிக்கல் நிறைந்ததாக உள்ளது. இதனை செயல்படுத்த முடியாது என இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
சமீபத்தில் சென்னை போராட்டத்திற்கு பங்கேற்க சென்றவர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தி சுமுக முடிவு ஏற்பட்டது. சென்னை சென்ற ஊழியர்களுக்கு 2 நாள் சம்பளத்துடன் கூடிய தற்செயல் விடுப்பாக கருத வேண்டும் என வலியுறுத்தினோம். அதனை அதிகாரிகள் ஏற்றனர். ஆனால் மதுரையில் சில இடங்களில் ஊழியர்களிடம் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதனை திரும்ப வழங்க வேண்டும் என்றார்.