மாநில கல்லுாரியில் ரூ.21 கோடியில் சிறப்பு மாணவர்களுக்கான விடுதி
மாநில கல்லுாரியில் ரூ.21 கோடியில் சிறப்பு மாணவர்களுக்கான விடுதி
UPDATED : டிச 06, 2024 12:00 AM
ADDED : டிச 06, 2024 09:07 AM
சென்னை:
சென்னை மாநிலக்கல்லுாரியில், 21.60 கோடி ரூபாயில், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான விடுதிகளை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பார்வை திறன் குறைந்த சிறப்பு பிரிவு மாணவ, மாணவியரின் கோரிக்கையை ஏற்று, சென்னை மாநிலக்கல்லுாரி வளாகத்தில், 64,455 சதுரடியில், இரண்டு தளங்களுடன் தனித்தனி விடுதிகள் கட்டப்பட்டன.
இதில், மாணவர்களுக்கு, 38 அறைகளும், மாணவியருக்கு, 32 அறைகளும் உள்ளன. அதாவது, 114 மாணவர்கள், 96 மாணவியர் தங்கும் வசதியுடன் இந்த விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அறையிலும், மூன்று கட்டில்கள் போடப்பட்டு, அவற்றுக்கு மேலே தனித்தனி மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்று பேரும் தனித்தனியாக எழுதி, படிக்கும் வகையில் மேஜை, நாற்காலி வசதிகள் உள்ளன.
அனைத்து தளங்களிலும், தொட்டு உணரும் வகையில், வழிகாட்டும் மேற்பரப்பு குறிகாட்டிகளுடன் தரை அமைப்பு உள்ளது. பார்வையற்ற மாணவர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், அனைத்து வழிமுறைகளும் பிரெய்லி எழுத்துகளில் உள்ளன.
அறைகளில் அவசரகால அழைப்பு மணி உட்பட பல்வேறு வசதிகளும் உள்ளன.
இந்த கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், பார்வையற்ற மாணவ, மாணவியரிடம் விடுதியின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அவர்கள் மகிழ்ச்சியுடன், தங்களுக்கு அனைத்து வசதிகளும் பயனுள்ளதாக கூறி, நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கோவி. செழியன், சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 19.28 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டரங்கை, அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
நிகழ்வில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி உட்பட பலர் பங்கேற்றனர்.