UPDATED : செப் 25, 2026 09:45 AM
ADDED : செப் 25, 2026 09:49 AM
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்த தமன் சிங் சோன்வானி, தொழிலதிபர் மகன் மற்றும் மருமகளுக்கு வேலை வாங்கி தருவதற்காக 45 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் கடந்த 2018 - 23 டிசம்பர் வரை முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது அம்மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக 2020 - 23 வரை பதவி வகித்தவர் தமன் சிங் சோன்வானி.
சத்தீஸ்கரில் 2023ம் ஆண்டின் இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததும், அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பான விவகாரங்கள் அம்பலமாகின.
இதைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் சி.பி.ஐ., தரப்பில் இந்த முறைகேடுகள் தொடர்பாக முதற்கட்ட விசாரணை தொடங்கியது. இந்த வழக்குகளின் அடிப்படையில் விசாரணையை கையில் எடுத்த அமலாக்கத் துறை சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததை உறுதி செய்தது.
வழக்கில் தொடர்புடைய அரசு பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவர் தமன் சிங் சோன்வானி மற்றும் இடைத்தரகர்களை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக பதவி வகித்த காலத்தில், தமன் சிங் சோன்வானி கடந்த 2021ல் தொழிலதிபரின் மகன் மற்றும் மருமகளுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, தன் கட்டுப்பாட்டில் இருந்த 'கிராமின் விகாஸ் சமிதி' என்ற அமைப்பு மூலம், சி.எஸ்.ஆர்., எனப்படும் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிதி என்ற பெயரில் 45 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார்.
இந்த தேர்வில் தமன் சிங் சோன்வானியின் உறவினர்களான நிதிஷ் சோன்வானி, சாகில் சோன்வானி, மீஷா கோஸ்லே, தீபா அதில் மற்றும் தொழிலதிபரின் மகன், மருமகள் ஆகியோர் அரசு தேர்வில் முறையே மூன்று மற்றும் நான்காம் இடத்தை பிடித்து தேர்வாகினர்.
தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் வழங்குவதாக கூறி, பல்வேறு தேர்வர்களிடம் இருந்தும் 3.28 கோடி ரூபாய் அளவுக்கு அவர் லஞ்சம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் தமன் சிங் சோன்வானி உட்பட ஏழு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடந்த இந்த முறைகேடு விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
