மாணவர்களை அரசியலுக்காக பயன்படுத்துகிறார் ராகுல்: ஏ.பி.வி.பி., செயலர் குற்றச்சாட்டு
மாணவர்களை அரசியலுக்காக பயன்படுத்துகிறார் ராகுல்: ஏ.பி.வி.பி., செயலர் குற்றச்சாட்டு
UPDATED : செப் 25, 2026 09:44 AM
ADDED : செப் 25, 2026 09:45 AM
புதுடில்லி:
மாணவர்களின் பிரச்னைகளை பேசுவதை விட, அவர்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதிலேயே காங்கிரஸை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு ஆர்வம் இருப்பதாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி., எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் குற்றஞ்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் சார்பில், 'மாணவர் குரல்' என்ற பெயரில் மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த கூட்டங்களில் பங்கேற்கும் ராகுல், வினாத்தாள் கசிவு, கல்விக் கட்டண உயர்வு, அரசு வேலைகளுக்கான போட்டி தேர்வுகளில் முறைகேடு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து, மத்தியில் ஆளும் பா.ஜ.,வை விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், ஏ.பி.வி.பி., தேசிய பொதுச்செயலர் வீரேந்திர சிங் சோலங்கி, ராகுலின் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிகள் குறித்து கூறியதாவது:
மாணவர் பிரச்னைகளை மாணவர்களே முன்வைக்க வேண்டும். ராகுல் மாணவர் அல்ல; பார்லிமென்டில் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். 'சாத்ரோன் கி கூஞ்ச்' என்ற பெயரில் மாணவர்களின் குரலை எழுப்புவதாக அவர் கூறுகிறார். ஆனால், மாணவர்களின் குரலை மாணவர்கள் தான் எழுப்ப வேண்டும்.
காங்கிரஸ், இந்த நிகழ்ச்சிகள் வாயிலாக மாணவர் அரசியலில் நுழைய முயற்சிக்கிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறது. மாணவர்களின் கூட்டத்தை திரட்டுவதற்காக பெண்களை நடனமாட வைக்கின்றனர். நகைச்சுவை மற்றும் மிமிக்ரி கலைஞர்களை அழைக்கின்றனர்.
மத்திய பிரதேசத்தின் இந்துாரில் சமீபத்தில் நடந்த காங்கிரஸின் மாணவர் குரல் நிகழ்ச்சிக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு கணிசமான தொகை வழங்கப்பட்டது.
இதற்கு மாறாக, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் மாணவர்களுடன் இணைந்து செயல்பட்டு, அவர்களின் பிரச்னைகளை பல்கலை மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், தேசிய தேர்வு முகமை, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளிடமும், அரசிடமும் ஏ.பி.வி.பி., முன்வைத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
