தனியார் கல்லுாரி மாணவர் பட்டியலில் குளறுபடி? லேப்டாப் தரவில்லை என குமுறல்
தனியார் கல்லுாரி மாணவர் பட்டியலில் குளறுபடி? லேப்டாப் தரவில்லை என குமுறல்
UPDATED : ஜன 31, 2026 11:07 AM
ADDED : ஜன 31, 2026 11:09 AM
கோவை:
அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் இலவச லேப்டாப் வழங்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தகுதியான பல மாணவர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ., போன்ற அனைத்து துறை சார்ந்த மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 14 கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு பயிலும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காகத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது 111 தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. 'புதுமைப்பெண்', 'தமிழ்ப் புதல்வன்', 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' ஆகியவற்றில் பயன்பெறுவோர் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், 30 ஆயிரம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. கலெக்டர் பவன் குமார், மேயர் ரங்கநாயகி நேற்று முன்தினம் அரசு கலைக்கல்லூரியில் 1,185 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்பில் விவரங்கள் சரியாகப் பதிவேற்றப்பட்ட போதிலும், தகுதியான பல மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என தெரிகிறது.
கலெக்டரிடம் மனு அளிக்க வந்த ஒருவர் கூறுகையில், 'எனது மகள் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறார். ஆனால், கல்லூரியிலிருந்து லேப்டாப் பெறுவதற்கான தகுதியுள்ளவர்கள் பட்டியலில் அவர் பெயர் இல்லை என கூறிவிட்டனர். எங்களை போன்ற பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு அரசின் உதவிகள் முறையாக வந்து சேர வேண்டும்,' என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
அரசின் இத்திட்டம் தகுதியான மாணவர்கள் அனைவருக்கும் முழுமையாக சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு மாணவரும் விடுபடாமல் இருப்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எங்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

