சட்டங்களை மாணவர்கள் அறிந்து கொள்வது அவசியம்; விழிப்புணர்வு முகாமில் தகவல்
சட்டங்களை மாணவர்கள் அறிந்து கொள்வது அவசியம்; விழிப்புணர்வு முகாமில் தகவல்
UPDATED : நவ 02, 2024 12:00 AM
ADDED : நவ 02, 2024 10:43 AM

பந்தலுார்:
பந்தலுார் குற்றவியல் நீதிமன்ற வட்ட, சட்ட பணிகள் குழு சார்பில், டியூஷ் மெட்ரிக் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சுசீந்திரநாத் வரவேற்றார். நிகழ்ச்சியில், நீதிபதி சிவக்குமார் பேசியதாவது:
மாணவர்கள் படிப்பது, பிறருக்கு உதவுவது போன்ற எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
பிறர் மத்தியில் சாகசம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தேவையற்றது. சினிமா பொழுது போக்கு மட்டுமே தவிர, அதனை நிஜ வாழ்க்கையாக மாற்றக்கூடாது. சிறு வயதில் தேவையற்ற எண்ணங்களை வளர்த்தால், போக்சோ போன்ற கடுமையான தண்டனைகளை அனுபவிக்க வேண்டும். கல்வியில் சிறப்பான இடத்தை பெற முடியாவிட்டாலும், எதில் சாதிக்க முடியுமோ அதில் கவனம் செலுத்தி வெற்றியடைய வேண்டும்.
சர்வதேச போதை கும்பல் மாணவர்களை குறிவைப்பது குறித்த நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் நடத்தி, அவர்களை விழிப்படைய செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வக்கீல் கணேசன் பேசுகையில், மாணவர்கள் படிக்கும் வயதில் ஒழுக்கத்தை கடைபிடிப்பது அவசியமாகும். மொபைல் போன்களை பயன்படுத்தும்போது, படிப்பதற்கு தேவையான தகவல்களை மட்டுமே தெரிந்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக மாணவிகள் தங்கள் சுயவிபரங்கள் மற்றும் போட்டோக்களை போன்களை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
மாணவர்கள் வாகனங்களை இயக்கினால், அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்கொலை எண்ணங்களை தவிர்ப்பதுடன், ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் இலவச சட்ட பணிகள் குழு அல்லது நீதிபதியை சந்தித்து கூறி தீர்வு காணலாம், என்றார்.
சப்-இன்ஸ்பெக்டர் பெள்ளி உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் பாக்கியம் நன்றி கூறினார்.