பத்திரிகையாளர்களை துன்புறுத்த கூடாது; போலீசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
பத்திரிகையாளர்களை துன்புறுத்த கூடாது; போலீசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
UPDATED : பிப் 06, 2025 12:00 AM
ADDED : பிப் 06, 2025 11:39 AM
சென்னை:
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை வழக்கில், முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக, விசாரணை என்ற பெயரில், பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது என, சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை வழக்கை, சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
பறிமுதல்
இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக, விசாரணை என்ற பெயரில், பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது என, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட கோரி, பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், சென்னை பிரஸ் கிளப் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, பிரஸ் கிளப் சார்பில் வழக்கறிஞர் இளங்கோவன், பத்திரிகையாளர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஜோதிமணியன், கே.பாலு, அருண் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது, வழக்கில் பத்திரிகையாளர்கள், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு, ஒத்துழைப்பு வழங்கி உள்ளனர். ஆனால், அவர்கள் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்; அவற்றை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.
செய்தியில் எந்த இடத்திலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. உண்மை வெளிவர வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், விசாரணை என்ற பெயரில், பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.
வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை சிறப்பு புலனாய்வுக் குழு கேட்டுள்ளது. இது, பத்திரிகையாளர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என்றனர்.
போலீசார் தரப்பில் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, பத்திரிகை சுதந்திரத்தை தடுக்கவில்லை. சம்மன் மட்டுமே அனுப்பப்பட்டு, விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்களை துன்புறுத்தும் எண்ணம் இல்லை. பத்திரிகையாளர்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.
கேள்வி
இதையடுத்து, முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது யார்; பத்திரிகையாளர்களிடம் தனிப்பட்ட விபரங்களை ஏன் கேட்கிறீர்கள்; பத்திரிகையாளர்களை தவிர எத்தனை பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது; சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளை விசாரித்தீர்களா? என, பல்வேறு கேள்விகளை, நீதிபதி எழுப்பினார்.
இதையடுத்து, முதல் தகவல் அறிக்கை வெளியான வழக்கில், சிறப்பு புலனாய்வுக் குழு, விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது. விசாரணைக்கு பத்திரிகையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கூறி, வழக்கை முடித்து வைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.