குழந்தைகளிடம் உழைப்பு சுரண்டல்; விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நீதிபதி எச்சரிக்கை
குழந்தைகளிடம் உழைப்பு சுரண்டல்; விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நீதிபதி எச்சரிக்கை
UPDATED : ஜன 28, 2026 12:25 PM
ADDED : ஜன 28, 2026 12:30 PM

திருப்பூர்: தேசிய பெண் குழந்தைகள் தினம் மற்றும் பன்னாட்டு கல்வி நாள் ஆகியன முன்னிட்டு சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் திருப்பூர் தி பிரன்ட்லைன் அகாடமி மெட்ரிக் பள்ளியில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு குழு வக்கீல் கவுதம் பாரதி முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி சந்தோஷ் தலைமை வகித்து பேசியதாவது:
மாணவர்கள், நன்கு கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும். தங்கள் குடும்பத்தையும் இந்த சமுதாயத்தையும் முன்னேற்றுவது அடிப்படைக் கடமை என்று கருதி செயலாற்ற வேண்டும்.
குழந்தைகளிடம் உழைப்பு சுரண்டல் பாலியல் அத்துமீறல் ஆகியன குறித்து கவனமாக இருக்க வேண்டும். நாளிதழ் வாசிப்பு, புத்தக வாசிப்பு, நுாலகங்களை பயன்படுத்துவது ஆகியன மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, தேசிய பெண் குழந்தைகள் தினத்தின் முக்கியத்துவம், பாலின சமத்துவம், இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள சமத்துவ உரிமை, பாகுபாட்டுக்கு எதிரான உரிமை, பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு, கருத்துரிமை, வாழ்க்கை மற்றும் தனிநபர் சுதந்திர உரிமை, கட்டாய கல்வி உரிமை உள்ளிட்ட சட்டப் பிரிவுகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
முகாமில் முன்னதாக பள்ளி மாணவி லக் ஷிகா வரவேற்றார். மாணவி தனிஷ்காஸ்ரீ நன்றி கூறினார். சட்டப்பணிகள் ஆணைக் குழு மூத்த நிர்வாக உதவியாளர் சிராஜூதீன், சட்ட உதவி பாதுகாப்பு அலுவலர் கவுதம், பள்ளி முதல்வர் வசந்தராஜ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

