நீலகிரியில் முதல் நர்சிங் கல்லுாரி கூக்கல் தொரையில் துவக்கம்
நீலகிரியில் முதல் நர்சிங் கல்லுாரி கூக்கல் தொரையில் துவக்கம்
UPDATED : ஜன 28, 2026 12:30 PM
ADDED : ஜன 28, 2026 12:32 PM

கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை பகுதியில், மாவட்டத்தின் முதல் நர்சிங் கல்லூரி துவக்கப்பட்டது.
கோத்தகிரி கூக்கல்தொரை பகுதியில், தேவமாதா செவிலியர் பயிற்சி பள்ளி, 1998ம் ஆண்டு துவக்கப்பட்டு, 2025 வரை பயிற்சி பள்ளியாக செயல்பட்டு வந்தது. இப்பயிற்சி பள்ளி தற்போது, மாநில அரசால் அனுமதி வழங்கப்பட்டு, பி.எஸ்சி., செவிலியர் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டு, 2025 - 26ம் ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கை நடந்தது.
கல்லுாரியின் முதலாம் ஆண்டு பி.எஸ்சி., நர்சிங் பயிலும் மாணவிகள் தீபம் ஏற்றும் விழாவில், மாணவியர் உறுதிமொழி பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், நீலகிரி மறை மாவட்ட பங்குத்தந்தை அமல்ராஜ், கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி நிறுவனர் தன்ராஜ், மேரி மாதா பிராந்திய சுப்பீரியர் அருட் சகோதரி ரிட்டி பிரான்சிஸ் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினர்.
தொடர்ந்து, கல்லூரியில் பயிலும் மாணவியர் கையில் தீபம் ஏந்தி, அர்ப்பணிப்புடன் சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேரிமாதா மண்டல அருள் சகோதரி டிட்டி பிரான்சிஸ் நன்றி கூறினார்.

