மாணவர்களின் எதிர்காலத்தை பொற்காலமாக மாற்றும் கடுவனுார் அரசு மேல்நிலைப் பள்ளி
மாணவர்களின் எதிர்காலத்தை பொற்காலமாக மாற்றும் கடுவனுார் அரசு மேல்நிலைப் பள்ளி
UPDATED : பிப் 22, 2026 11:36 AM
ADDED : பிப் 22, 2026 11:38 AM

கடுவனுார் அரசு மேல்நிலைப் பள்ளி கிராமப்புற மாணவர்களின் கல்வி கனவை நிறைவேற்றி மாணவர்களின் எதிர்காலத்தை பொற்காலமாக மாற்றும் பெருமைக்குரிய பள்ளியாக உள்ளது.
கடுவனுாரில் துவங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் படித்த மாணவர்கள் 5ம் வகுப்புக்கு பின் 6ம் வகுப்பில் சேர தேவபாண்டலம், சங்கராபுரம், அரியலுார், புதுப்பட்டு, மூங்கில்துறைப்பட்டு ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கச் செல்லும் நிலை இருந்தது. மாணவர்கள் சைக்கிள் அல்லது பஸ்களில் சென்று படித்து வந்தனர்.
பல ஆண்டுகளாக இருந்து வந்த மாணவர்களின் சிரமத்தைப் போக்க இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கடுவனுார் பகுதி மக்கள் வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து கடந்த 2001ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இப்பள்ளியில் கடுவனுார், பாக்கம், புதுார், மூக்கனுார், சிவபுரம் தொழுவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் இருந்து அதிகளவிலான மாணவர்கள் சேர்க்கை நடந்தது.
பின், கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இப்பள்ளியில் 480 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர் என 25 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
படித்த மாணவர்கள் தற்போது இன்ஜியர்கள், டாக்டர்கள், காவல் துறை, ராணுவம் மற்றும் அரசு துறைகளில் உயரதிகாரிகளாகவும், வெளிநாடுகளிலும் பணிபுரிகின்றனர். மேலும், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர்.
மேலும், இப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் 2024ம் கல்வி ஆண்டில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அதே போல் 2021ம் ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளனர்.
கடந்த 2023 - 2024ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் இரண்டு மாணவர்கள் அறிவில் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர். அது மட்டுமின்றி பள்ளியளவில் முதல் மதிப்பெண்ணாக 500க்கு 479 மதிப்பெண் பெற்றுள்ளனர். பிளஸ் 2 வகுப்பில் 600க்கு 535 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று இப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர்.
கடுவனுார் கிராமத்தில் தற்போது இப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களின் சீரிய முயற்சியால் மாணவர்களின் எதிர்காலம் பொற்காலமாக மாறும் என்பதில் ஐயமில்லை.
பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன்
மாணவர்களை ஊக்குவித்து அவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக உள்ளேன். நான் தி.மு.க., ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளேன். இப்பள்ளிக்கு அனைத்து விதத்திலும் பல்வேறு உதவிகளை செய்து கொடுத்து வருகிறேன். பள்ளிக்கு மாணவர்களின் நலன் கருதி வகுப்பறை, கழிவறை, சமையலறை கட்டடங்கள் கட்டிக் கொடுத்துள்ளேன். மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கியுள்ளேன்.
மாணவர்கள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலிலும் விளையாட்டு மற்றும் அறிவு சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்று வரும் மாணவர்களை பாராட்டி அவர்களுக்கு நினைவு பரிசுகளையும் அவ்வப்போது வழங்கி வருகிறேன். இப்பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள் கல்லுாரிகளில் சேர பல்வேறு உதவிகளும் செய்து வருகிறேன்.
இப்பள்ளியில் திறமையான ஆசிரியர்களால் மாணவர்கள் நன்றாக படித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காரணமாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர். விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்காக பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
- துரைமுருகன், தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர், ரிஷிவந்தியம்.
இப்பள்ளியில் படித்ததை பெருமையாக நினைக்கிறேன்
நான் இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தது பெருமையாக நினைக்கிறேன். இப்பள்ளியில் படிக்கும் போது எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் கூறிய அறிவுரையின்படி படித்து நல்ல நிலையில் உள்ளேன். தற்போது கடுவூர் ஊராட்சி தலைவராக இருக்கின்றேன்.
நான் படித்த பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேட்டறிந்து அவ்வப்போது செய்து வருகிறேன். விளையாட்டுப் போட்டி மற்றும் அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்று வரும் மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்து வருகிறேன்.
- ஏழுமலை, ஊராட்சித் தலைவர்.
மாணவர்கள் முன்னேற பாடுபட்டு வருகிறோம்
நான் கடுவனூர் ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றி வருகிறேன். கடுவனுார் அரசு மேல்நிலைப் பள்ளி இப்பகுதியில் அமைந்தது நாங்கள் பெருமையாக கருதுகிறோம். கல்வி கற்பதற்காக கடல் தாண்டி செல்வது போல இப்பகுதியில் உள்ள மாணவர்கள் அன்றைய காலத்தில் அங்கும் இங்குமாக ஓடி ஓடி சென்று படித்து வந்தனர்.
ஆனால் தற்போது பிளஸ் 2 வகுப்பு வரை இப்பகுதியில் மாணவர்கள் படித்து கல்லுாரி படிப்பிற்கு வெளியே செல்கின்றனர். படிப்புக்காக ஏங்கிய மாணவர்கள் இப்பகுதியில் ஒரு காலத்தில் ஏராளமான இருந்தனர். தற்போது இங்குள்ள வசதியை பயன்படுத்தி மாணவர்கள் நல்ல முறையில் பயின்று முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் பாடுபட்டு வருகிறோம்.
- பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலர்.
ஆசிரியர்கள் ஒத்துழைப்பால் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது
இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வருகிறேன். இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் திறமையானவர்களாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதால் தான் மாணவர்களை நல்வழிப்படுத்தி அதிக மதிப்பெண்களைப் பெற எளிமையாக உள்ளது.
மாணவர்களுக்கு தினமும் காலை, மதியம், மாலை என சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறோம். அதற்கு முக்கியமாக ஆசிரியர்கள் ஒத்துழைப்பும் மாணவர்கள் மீது ஆசிரியர்களுக்கு உள்ள அக்கறையை பார்க்கும் போதும் பெருமையாக உள்ளது.
- ஜெயவேல், தலைமை ஆசிரியர்.

