UPDATED : ஆக 14, 2026 05:15 PM
ADDED : ஆக 14, 2026 05:16 PM
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், கலைத்திருவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2026 - 2027ம் ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் இளையோர் திறன் என்ற மையக்கருத்தின் அடிப்படையில், தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர், மாணவர் குழுக்களுக்கு நடத்தப்பட்டது.
இப்போட்டியில் தங்கள் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வட்டார அளவில் நடக்கும் போட்டிகளுக்கு தகுதி பெறுவர். அதைத்தொடர்ந்து, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், மாணவர்களுக்கு கவின் கலை நுண்கலை, வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம் மற்றும் நாடகம் ஆகிய கலைப்பிரிவுகளில், 32 வகையான போட்டிகள், நகராட்சி நடுநிலைப் பள்ளி, சந்தைப்பேட்டை மற்றும் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஆகிய மையங்களில், நேற்று நடந்தன.
இதில், 270 மாணவர்கள் பங்கேற்று, தங்கள் கலைத்திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். முன்னதாக, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியை பள்ளி தலைமையாசிரியர் ரேவதி துவக்கி வைத்தார்.
வட்டார கல்வி அலுவலர்கள் தங்கவேல், கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
