UPDATED : ஆக 24, 2024 12:00 AM
ADDED : ஆக 24, 2024 07:52 PM
சென்னை:
கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகளை, பள்ளி கல்வித்துறையுடன் இணைக்கும் முயற்சிகளை கைவிட வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில் மதுரையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை, பள்ளி கல்வித்துறையோடு இணைக்கும் திட்டம் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிரமலை கள்ளர் வகுப்பை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில், 299 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசு வழங்கி வருகிறது.
இந்த சூழ்நிலையில், இப்பள்ளிகளை பள்ளி கல்வித்துறையின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகளை, அரசு எடுத்து வருவதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை. இப்பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், தனித்துவத்தோடு இயங்கி வருகின்றன.
இவற்றை மேலும் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. எனவே, இப்பள்ளிகளை பள்ளி கல்வித்துறையின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானதும், உள்நோக்கம் கொண்டதுமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.